பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியாழ்வார் திருமொழி

533

மகாராசா துறவு



நூலை முதல் நூலாகவும், நம்பியாண்டார் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வகை நூலாகவும் கொண்டு சேக்கிழார் இதனை விரிநூலாகப் பாடினார். "தண்டமிழின் மேலாந்தரம்" எனக் குறிப்பிடப்பட்ட ஆறு நூல்களில் இதுவும் ஒன்று. இது திருத்தொண்டர் புராணம் என்றும் கூறப்படும். இது சைவத் திருமுறை 12-னுள் பன்னிரண்டாம் திருமுறையாகும்.

பெரியாழ்வார் திருமொழி = நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஒரு பகுதி. இதில் கிருஷ்ணனது சரித்திரம், அழகாகவும், தோத்திர ரூபமாகவும் பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் பெரியாழ்வார். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளையும் மணவாள முனிகளும் உரை எழுதியுள்ளனர். காலம் 9 ஆம் நூற்றாண்டு.

பெரும்பாணாற்றுப்படை = இது சங்கம் மருவிய பத்துப்பாட்டில் ஒன்றாகும். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இந்நூல் தொண்டைமான் இளந்திரையன் மீது பாடப்பட்டது. இந்நூலால் அம்மன்னனது பிறப்பும், காஞ்சியம்பதியின் சிறப்பும், தமிழ் நாட்டின் நாகரிகப் பண்பும், தெற்றத் தெளிய விளங்குகின்றன. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை உண்டு. 500 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

பொ

பொருநர் ஆற்றுப்படை = 248 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் ஆனது. இது பத்துப்பாட்டு என்னும் தொகை நூலுள் ஒன்று. இது சோழன் கரிகால் பெருவளத்தான் மீது முடத்தாமக் கண்ணியர் என்பவரால் பாடப்பட்டதாகும். போர்க்களம் பாடும் பொருநனை ஆற்றுப்படுத்தலின் இது இப்பெயர் பெற்றது. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை உண்டு.

மகாராசா துறவு = இது வீர சைவ மதத்தைச் சாா்ந்த நூல். மன்னன் சிறக்க வீற்றிருந்தும், அச்சிறப்பை உதறித்தள்ளித் துறவு பூண்ட நிலையினைப்