பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பரிதியார்

606

பாண்டித்துரைத் தேவர்


பரிதியார் = இவர் திருக்குறளுக்கு உரை எழுதியவர். சிறந்த சைவ சமய உணர்ச்சியினர். இவரைப் பருதியார் என்றும் கூறுவர். காலம் அறிதற்கு இல்லை.

பரிமேழகர் = இவர் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோயில் பட்டாசாரியர்களில் ஒருவர். திருக்குறளுக்குச் சிறந்த உரை கண்டவர். இவர் திருமுருகாற்றுப்படைக்கும் பரிபாடலுக்கும் உரை எழுதியதாகவும் கூறுவர். மணிவாசகர் பொருட்டுச் சொக்கலிங்கப் பெருமான் குதிரை மீது வந்த காரணத்தால், அவரைப் பரிமேலழகர் என்று கூறுவது கொண்டு, அப்பெயரை இவர் பெற்றுத் திகழ்வதால் இவரைச் சைவ மரபினர் என்றும் கூறுவர். இவரது திருக்குறள் உரைச் சிறப்பை உமாபதி சிவாசாரியர் "தெள்ளுபரி மேலழகர்செய்த உரை" என்று பாடிப் பாராட்டியுள்ளார். காலம். கி. பி. 13 ஆம் நூற்றாண்டு.

பவணந்தி முனிவர் = இவர் தொண்டைநாட்டுச் சனகாதிபுரத்தில் சைன மரபில் உதித்தவர். தந்தையார் சன்மதி முனிவர் எனப்படுவார். சீயகங்கன் வேண்டுகோளுக்கு இணங்கி நன்னூல் என்னும் நூலைப் பாடியவர். இவர் பல்கலைக்குரிசில் என்று சங்கர நமச்சிவாயப் புலவரால் பாராட்டப்பட்டவர். காலம் கி. பி. 13 ஆம் நூற்றாண்டு.

பனம்பாரனார் = இவர் பழங்காலப் புலவர். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் பாடியவர். இவர் யாப்பிலக்கண நூலும் செய்ததாகத் தெரிகிறது. இதனை யாப்பருங்கல விருத்தியுரையால் உணரலாம். குறுந்தொகையிலும் ஒரு பாடல் உளது.

பாண்டித்துரைத் தேவர் = இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவர். தமிழ்நூல்கள் பல வெளியாதற்குத் துணை புரிந்தவர். இது போது உள்ள மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுதற்கு முதற் காரணர் இவரே. இவர் சைவ மஞ்சரி, துதி மஞ்சரி, பன்சொல் திரட்டு என்னும் தொகை நூல்களின் ஆசிரியர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.