பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தமிழ் இலக்கிய வரலாறு


நயங்களோடு நுண்ணிய பொருட்செறிவும் கொண்டிலங்குகின்றன.[1]

குறவஞ்சி - பெயர்க் காரணம்

பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவியொருத்தி அவன்மீது காதல் கொண்டு வாடி விரக வேதனையால் தவிக்கும்போது, குறக்குல மகளொருத்தி அவளுக்குக் குறி கூறிப் பரிசில் பெறுவதான செய்திகளைக் கூறும் சிற்றிலக்கியமாதலின் 'குறவஞ்சி' என்னும் பெயர்த்தாயிற்று. குறக்குலத்தைச் சார்ந்த பெண், 'குறவஞ்சி' எனப் பெற்றாள்.

இலக்கணம்

'கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்

ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்'

என்ற தொல்காப்பியக் களவியல் நூற்பாவினை விளக்கும் பல பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். குறவஞ்சி இலக்கியம் பின்னாளில் 'குறத்திப் பாட்டு' என்றும் வழங்குவதாயிற்று.

இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும்

திறப்பட வுரைப்பது குறித்திப் பாட்டே

என்று பன்னிரு பாட்டியல் குறவஞ்சியின் இலக்கணம் கூறுகின்றது. பொருளமைதியால் இவ்விரு இலக்கிய வகைகளும் ஒத்திலங்கக் காணலாம்.

"A poem in which a Kurava women is represented as describing to a maiden her fortune in her love-affair." என்ற ஆங்கில விளக்கங் காண்க.


  1. குற்றாலக் குறவஞ்சி. கழகப் பதிப்பு, முன்னுரை ப. 24.