பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஐரோப்பியர் காலம்

247


நயம்

திருக்குற்றால மலை வளத்தினை ஆசிரியர் அழகுறப் புனைந்துள்ளார்:

'வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்;
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்;
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்;
ககன சித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்;
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்;
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்;
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.'

கதைத் தலைவி வசந்தவல்லி இறைவனின் திருவுலாக் காட்சியைக் கண்டு காதல் கொண்டு மயங்குவதைக் கவினுறக் கண்ணிகளில் சித்திரிக்கின்றார் இக் கவிஞர்.

'தண்ணமுது டன்பிறந்தாய் வெண்ணிலாவே! அந்தத்
தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே!
பெண்ணுடன் பிறந்ததுண்டோ வெண்ணிலாவே! - என்றன்

பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே!'

இக் குறவஞ்சியை இயற்றியதற்காக, அது போது மதுரையை ஆண்ட முத்து விஜய சொக்கலிங்க நாயக்கர் 'குறவஞ்சி மேடு' என்னும் பகுதியை இனாமாக அளித்தார் என்பதைத் தாமிர சாசனத்தால் அறிகிறோம்.

முக்கூடற் பள்ளு

பள்ளு- பெயர்க் காரணம்

பள்ளர்களின் வாழ்க்கையினைச் சித்திரிக்கும் இலக்கியமாதலின் 'பள்ளு' என்ற பெயர் ஏற்பட்டது. (A dramatic poem dealing with the life of the pallars.)