பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமையும் சிறப்பும்

25

பதைக் கொண்டு, அம்மதுரமொழி தமிழ்மொழியென்றே கொள்ளலாம்’[1] என்று மகாவித்துவான் ரா.ராகவையங்கார் ‘தமிழ் வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிடுகின்றார்.

வடமொழியின் ஆதி காவியமென எண்ணப்படுவது வால்மீகி இராமாயணம். அதிலேயே ‘என்று முள தென்ற மிழை’ வளர்த்து ஏற்றங்கண்ட பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது. “பின்பு பொன்னிறத்ததாயும், அழகுடைத்ததாயும், முத்து மணி இவற்றால் அணிசெய்யப் பட்டதாயும், நசரத்து அரணொடு இணைக்கப்பட்டதாயு முள்ள பாண்டியர் வாயிற்கதவை, வானரர்காள்! போய்க்காண்பீர்!” என வால்மீகி முனிவர் கூறுகின்றமையாலும், வியாச முனிவரும் மகாபாரதத்தின் கண்ணே தமிழ் நாட்டின் சிறப்பையும் பாண்டிய அரசையும் பற்றிச் சிறப்பித்துக் கூறு கின்றமையானும், பாண்டியர் ஆண்ட நாட்டின் தொன்மை யும், அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றான் தெளியப்படுமாறு காண்க[2]

தமிழ்மொழி பழைமையிலும், சொல் வளத்திலும் இலக்கண வரம்புடைமையிலும், செய்யுள் வகையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்தது என்பது வெள்ளிடை மலை. வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூன்று உலக இலக்கிய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன என்று டேவிஸ் (Rhys Davis) என்பார் கூறுகிறார்[3]. உலகப் பழைய நாகரிகத்தில் ஒன்று சுமேரிய நாகரிகம்.


  1. திரு. ரா. ராகவையங்கார், தமிழ் வாலாறு. ப. 7-8
  2. திரு. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், தமிழ் மொழி வரலாறு, ப 64.
  3. The three classic languages of the world namely Sanskrit, Hebrew and Greek contain Tamil words in their vocabulary - Rhys Davis.