பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

289


'பாத்தி பிடிக்கிற நாளையிலே-என்னைப்
பார்த்துச் சிரிச்சிட்ட வேளையிலே
அன்பென்னும் நாற்றை என் நெஞ்சில் நட்டு - அதில்

ஆசைத்தண் ணீரையும் ஊற்றிவிட்டாய்'

கவிஞர் சாலை இளந்திரையனின் இயற்பெயர் மகாலிங்கம் என்பதாகும். தில்லிப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பணியாற்றிய இவர், 'இளந்திரையன் கவிதைகள்' 'அன்னை நீ ஆடவேண்டும்' எனும் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கற்றுத் துறை போய இக் கவிஞர், புரட்சியுள்ளமும், புதுமை நோக்கமும், சீர்திருத்த எண்ணமும், கொண்டவர். தத்துவ விசாரணையும் இவர் பாட்டில் தப்பாது இடம் பெறும். இதனை,

'ஆரூரர் இங்கிருக்க அங்கே திருநாளென்று

ஊரூராய்ச் சென்றலையும் ஊமர்போல்-நாமும்நாம்'

என்ற பாடற்பகுதியால் உணரலாம். மனிதனை விளித்து எழுச்சியுடன் கவிஞர் பாடுவதைப் பின்வரும் அடிகளில் காண்க.

'காட்டை அழித்தவன் நீயடா - கடுங்
கல்லும் புதர்களும் எறிய
மேட்டை இடித்து வீழ்த்திய- வளம்
வேண்டிய செய்தவன் நீயடா!
நாட்டை அமைத்தவன் நீயடா!-கொலை
நாசம் விளைத்த விலங்கினைச்
சாட்டை சொடுக்கி அடக்கியே- பழஞ்

சந்தடி தீர்த்த வன் நீயடா!'

கவிஞர் தமிழழகன் சந்தவின்பம் நிறைந்த கவிதை படைப்பதில் சமர்த்தர். அதனால் 'சந்தக் கவிமணி' எனும் பட்டமும் பெற்றுள்ளார். உணர்ச்சியும் கற்பனையும் வளமுற அமைந்த இவருடைய கவிதைகளில் உள்ளத்தைக் கவரும் ஒலிநயம் அமைந்திருத்தலைக் காணலாம்.

த.-19