பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

303


வசனத்தின் செல்வாக்கை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே அன்றைய கவிதைகள் இருந்தன. குறிப்பாகப் பாரதிக்கும் பின்வந்த பாரதிதாசன் பரம்பரையினர் அனைவருமே வறிதே செய்யுளை நிரப்பும் பொருட்டுச் சொற்களைக் கையாண்டனர். சொற்சுருக்கமே கவிதை என்ற நிலைபோய், சொற்பெருக்கமே கவிதை என ஆகிய நிலையில், வசனத்திலேயே கவிதை எழுதிவிடலாமே என்ற எண்ணம் வேரூன்றத் தொடங்கியது. இந்த எண்ணமே நாளடைவில் புதுக்கவிதை மலர்வதற்கு உரிய வித்தாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டு முதல் சனநாயக அரசுகள் தோன்ற, மக்கள் சுதந்திர நிழலில் இன்பம் காணத் தொடங்கினர். தனிமனித சுதந்திரம் என்ற நோய் மக்களைப் பிடிக்க அதன் விளைவாக 'ஹிப்பி' சமூகம் தோன்றியது. கட்டுப்பாட்டிற்கு எதிர்க்குரல் எழுப்பும் தகைமை மிக்கது இச்சமூகம். தன் எதிர்க்குரலை எல்லாத் துறைகளிலும் பரப்புதற்கும் இச் சமூகம் வழிவகுத்தது. அரசியல், கல்வி, சமூகம், தொழில் துறை என்ற துறைகளிலெல்லாம் ஏற்பட்ட கட்டுப்பாட்டின் எதிர்க்குரல் கவிதைத்துறையிலும் கேட்கத் தொடங்கியது. சீர், தளை, அடி, தொடை போன்ற எந்த விதியும் கவிதைக்குத் தேவையில்லை என்ற புதுக்குரல் கேட்கத் தொடங்கியது. இந்தப் புதுக்குரலும் வசன கவிதையுமே புதுக்கவிதையின் தோற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன. இதனை,

காலத்தின் பாதிப்பில் கூர்மை
தீட்டப்பட்ட அலகுகளால்
நாங்கள் புதிய

கானம் இசைக்கிறோம்

என்ற புதுக்கவிஞர் ஒருவரின் புதுக்கவிதையால் தெளிய லாம்.