பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

339


களில் நீண்ட வருணனைகளுக்கு இடமில்லை; கதை மாந்தரின் பண்பை விளக்குவதற்கோ கதைநிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமையலாம். மேலும், சிறுகதை 'குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவை மிக்கனவாக இருத்தல் வேண்டும்' என்பார் செட்ஜ்விக்.

தமிழில் பஞ்ச தந்திரக் கதைகளும், மதன காமராஜன் கதையும், விக்கிரமாதித்தன் கதையும் மிகப் பழமையானவை. கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டிலே விளங்கிய வீரமாமுனிவர், 'பரமார்த்த குரு கதை' முதலிய கதைகளைத் தமிழில் எழுதினார். அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார் 'விநோத ரச மஞ்சரி' என்னும் நூலை எழுதினார். இதில் அவர் தம் சிந்தனையிலே மலர்ந்த சிறுகதைப் போக்கான கதைகளைக் காணலாம்.

கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளை (1824-89) அவர்கள் 'பிரதாப முதலியார் சரித்திரமும்' 'சுகுண சுந்தரி கதையும்' எழுதினார். இந்நூல்கள் இக்காலப் போக்குப்படி நாவல்கள் என்று கொள்ளப்பட்டாலும், இந் நெடுங்கதைக்கு இடையிடையே பல சிறுகதைகளும் மலர்ந்துள்ளன என்பதை நாம் அறிய வேண்டும். தனித்தமிழ்த் தந்தையார் மறைமலையடிகளார் (1876-1950) 'கோகிலாம்பாள் கடிதங்கள்' என்னும் நூலினை எழுதினார். இந்நூல் கடிதத் தொகுப்பேயானாலும், ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையேபோலத் தோற்றமளிக்கின்றது. ஆயினும் - இவையெல்லாவற்றைக் காட்டிலும் வ.வே.சு. ஐயர் (1881 -1925) அவர்கள் எழுதிய 'மங்கையர்க்கரசியின் காதல்' என்னும் நூல் சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூலாய் விளங்குகின்றது. சுப்பிரமணிய பாரதியார் கவிஞராக மட்டுமின்றிச் சிறுகதை ஆசிரியராகவும் நமக்குக் காட்சியளிக்கிறார். அவர் எழுதிய 'திண்டிம சாஸ்திரி', 'ஸ்வர்ண குமாரி' முதலான கதைகள் சிறந்த கதைகளாகும்.