பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

361


எழும் உணர்வுகளை அப்பட்டமாக வெளியிடுவதற்கோ தயங்காதவர் இவர்.

அண்மையில் (1981) இவர் எழுதிய 'ஒரு மனிதனின் கதை' மகாத்மா காந்தியின் பணியைப் போலச் சிறப்பானது. ஒருவன் மதுவினால் பெறும் தீங்கையும், மதுவின்றி வாழ முடியாத அபாய நிலை (drink addict) எய்தும் ஒருவன் அதிலிருந்து மீள்வதற்குத் தற்போதுள்ள மருத்துவ முறை எவ்வாறு துணை செய்கிறது என்பதையும், படிப்போர் உள்ளத்தில் பதியுமாறு, இந்நாவலில் விளக்கியுள்ளார் சிவசங்கரி. மது விலக்குப் பிரச்சார நாவலாகக் கூறத்தக்க இந் நாவல் அலுப்பும் சலிப்பும் வராத சுவையான நாவல். இந் நாவலைப் படித்துப் பல மது விரும்பிகள் மனம் மாறியதாகத் தெரிகிறது. 'பாலங்கள்' சிறந்த படைப்பாகும்.

ஸ்ரீ வேணுகோபாலன் என்னும் சிறந்த எழுத்தாளர், சிவப்பு விளக்குப் பகுதிக் கதைகளை வழங்கியபோது, புஷ்பா தங்கதுரையானார். இப்போதும் வரலாற்று நாவல்களை ஸ்ரீ வேணுகோபாலன் என்னும் பெயரிலேயே வழங்கி வருகிறார். 'திருவரங்கன் உலா', 'மதுர நாயகி' ஆகியன இவருடைய சிறந்த வரலாற்று நாவல்களாகும்.

புஷ்பா தங்கதுரை என்னும் பெயரில், உண்மைக் கதைகளைச் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் எழுதிப் புகழ் பெற்றார். தினமணி கதிரில் எழுதிப் புகழ்பெற்ற இவர், இன்று எழுதாத பத்திரிகைகள் இல்லை. இவரது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' நாவல் திரைப்படமாகவும் புகழ்பெற்றது. இவர் நாவல்களிலும் பெரும்பாலானவை துப்பறியும் நாவல்களின் பாணியில் அமைந்துள்ளன. அண்மைக் காலத்தில் புதிய சூழ்நிலைகளில் நாவல்களைப் படைக்கத் தொடங்கியுள்ளார். 'கடலுக்குள் ஜுலி', 'இளமைக்கு வீசா' ஆகியன இத்தகைய புதுமை நாவல்களாகும்.