பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதற் பதிப்பின் முன்னுரை

தமிழ், இலக்கிய இலக்கண வளமும் பழமையும் சிறப்பும் கொண்டு துலங்கும் மொழியாகும். இம் மொழியில் தோன்றிய இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, வாழ்வு, இன்றைய நிலை ஆகியவை பற்றி அறிந்து கொள்வதால் பயன் உண்டு.

‘தமிழ் இலக்கிய வரலாறு’ சென்னைப் பல்கலைக் கழகத்தினரின் மூன்றாண்டுப் பட்டப் படிப்பு (New three years Degree Course) மாணவர்க்குப் பாடமாக அமைந்துள்ளது. இப் பாடத்திட்டத்தையொட்டி யான் இந் நூலினை எழுதியுள்ளேன். பழங்காலம் தொடங்கி இற்றைநாள் வரையில் தமிழ் மொழியில் எழுந்துள்ள இலக்கியங்களைப் பல்வேறு காலப் பகுதிகளில் அடக்கி, அவ்வக்கால நூல்களின் சிறப்பியல்புகளையும் தனிப் போக்குகளையும் குறிப்பிட்டு, இலக்கிய வளர்ச்சியினையும், புலவர்களைப் பற்றிய சில குறிப்புகளையும் காலங்களையும் இலக்கியத்தின் சுவைப்பகுதிகளையும் ஒருவாறு எழுதியுள்ளேன்.

தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இத் துறையில் கருத்து வேறுபாடுகள் எழுதல் இயற்கை. எனவே இந்நூலில் காணப்படும் கருத்துக்களுக்கு இடம் தந்து பிழைகளைப் பொறுத்தருளி என்னுடைய இந்த முதன் முயற்சியைத் தமிழுலகம் வரவேற்கும் என நம்புகின்றேன்.

தமக்கே உரிய முறையில் அழகியதோர் அணிந்துரை அருளி, அதனால் இந்நூலினை அணிபெறச் செய்திருக்கும், என்னுடைய மதிப்பிற்குரிய பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு யான் என்றும் கடப்பாடுடையேன்.

இந் நூலினைக் குறைந்த காலத்தில் அச்சிட்ட மாருதி அச்சகத்தினர்க்கும், அழகிய முறையில் வெளியிட்டு உதவிய ‘பாரி நிலையத்தினர்’க்கும் என் நன்றி உரியன.

சென்னை - 2, }
21.4.59 }

சி. பாலசுப்பிரமணியன்