பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதினெட்டாம் பதிப்பின் முன்னுரை


இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யான் எழுதிய இந்நூலிற்குத் தமிழ்கூறும் நல்லுலகம் அளித்த ஊக்கத்தினால், இப்பொழுது பதினெட்டாம் பதிப்பாக வெளிவருகின்றது. என் எளிய முதல் முயற்சியினை ஏற்றுப் போற்றி அளப்பிலா ஆதரவு நல்கிய தமிழ்ப் பேராசிரியப் பெரு மக்களுக்கும், அன்புத் தமிழ் மாணவர்களுக்கும், தமிழர் அனைவருக்கும் யான் பெரிதும் நன்றி செலுத்துகின்றேன். இந்நூல் மூன்றாண்டுப் பட்டப்படிப்பு மாணவர்கட்குப் பெருமளவில் பயன்படுவதோடு, தமிழ் நாட்டு அரசினரின் பொதுப்பணித் தேர்வு (Tamilnadu Public Service Commission Exam) எழுதுவோர்க்கும் பயன்பட்டு வருகின்றது. மேலும், டில்லி, கல்கத்தா, காசி, உஸ்மானியா, மைசூர், பெங்களூர், திருவேங்கடவன், கேரளா, இலங்கை, மலேயாப் பல்கலைக்கழகங்களிலும், பிரவீன் (Praveen) இந்தித் தேர்விற்கும் இந் நூல் பாட நூலாக வைக்கப்பட்டிருப்பதை எண்ணி, அப் பல்கலைக்கழகப் பாடநூல் குழுவினர்க்கு யான் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன். இந்நூலினை நல்ல முறையில் அச்சியற்றி உதவிய மாருதி அச்சகத்தாருக்கு என் நன்றி உரியது. முடிவாக, என் முதல் நூலினை ஏற்று என்னைத் தமிழுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உதவிய பாரி நிலையத்தினருக்கு என் பணிவார்ந்த நன்றி.

இப் புதிய பதிப்பில் சங்க இலக்கிய நூல்கள், சிறு பிரபந்தங்கள், இன்றைய இயல் (கவிதை, சிறுகதை, நாவல்) இசை, நாடகத் தமிழ் வளர்ச்சி முதலியன விரிவாய் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு இப்பொழுது வெளிவரும் இந்தப் பதிப்பு முழுமையும் திருத்தமும் கொண்டதாய் உள்ளது

- சி. பா.