பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

81


இரையாகாமல் இன்றளவும் நிலைபெற்று வாழும் பேற்றினைத் திருக்குறள் பெற்றுள்ளது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த நூல், அக்கால மக்களின் வாழ்க்கை நெறிக்கும் பொருந்தி, இன்றும் மாறாமல் அரும்பயன் விளைப்பதாய், உறுதிப்பொருள்களைப் பயப்பதாய் விளங்கும் மாட்சி வியக்கத்தக்கதாய் உள்ளது. அறிதொறும் அறிதொறும் அறியாமையைப் புலப்படுத்துவதாய், நவில்தொறும் நவில்தோறும் நயம் பயப்பதாய்த் திருக்குறள் விளங்குகிறது.

மூன்றாவதாக, எல்லாச் சாதியினர்க்கும் பொது நூலாய்த் திருக்குறள் திகழ்கிறது. இதனால்தான் திருவள்ளுவர்,

'பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'

என்றார். சான்றாக, மனோன்மணீயம் என்னும் நாடக நூலின் ஆசிரியர் திரு. சுந்தரம்பிள்ளையவர்கள்,

'வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி?'

என்று குறிப்பிட்டார்.

திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சில மொழிகளில் நூல் முழுதுமல்லாவிடினும், சில பாக்களாவது மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். ஜெர்மன், பிரெஞ்சு முதலிய மேலைநாட்டு மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. திராவிட மொழிகளில் தெலுங்கு, மலையாளத்திலும், வடமொழி, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில்

த. - 6