பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழ் இலக்கிய வரலாறு


டாக்டர் போப்பு (Dr. G.U. Pope) அவர்களும், வ.வே.சு. ஐயர் அவர்களும், தீட்சிதர் அவர்களும், ராஜாஜி அவர்களும் மொழி பெயர்த்துள்ளார்கள். தமிழ் இலக்கியத்தின்பால் டாக்டர் போப்பு போன்றவர்களை ஈடுபடுத்தியமைக்குத் திருக்குறள் ஒரு பெரிய காரணம் எனலாம், ஆல்பர்ட் சுவிட்சர் என்ற பெரியாரும் திருக்குறளின் பெருமையினைப் பாராட்டியுள்ளார். இத்தகைய சிறப்பு வேறெந்தத் தமிழ் நூலுக்கும் இல்லை எனலாம்.

முப்பானுால், உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமுறை முதலிய பெயர்கள் திருக்குறளின் வேறுபெயர்களாய் வழங்குகின்றன.

'ஒருவன், செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென

அறம்பா டிற்றே ஆயிழை கணவ!'

என்ற புறப்பாட்டின் தொடர்கொண்டு, 'அறம்' என்ற பெயரும் வழங்கியிருக்கும் என்பர்.

திருக்குறளின் அமைப்பும் பகுப்பும்

திருக்குறள் ஈரடியான் இயன்ற குறள் வெண்பாவினால் ஆன ஒரு நூலாகும். ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறள்கள் இந்நூலில் உள்ளன. பத்துக் குறள் வெண்பாக்கள் அடங்கியது ஓர் அதிகாரம். எனவே, திருக்குறள் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாய்ப் பகுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்களாய் - பகுதிகளாய் - பிரிக்கப்பட்டுள்ளது. அதில் அறத்துப்பால் முப்பத்தெட்டு அதிகாரத்தினையும், பொருட்பால் எழுபது அதிகாரத்தினையும், காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரத்தினையும் பெற்றிருக்கின்றன.