பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

'மனுமுறை கண்ட வாசகம்’ எனும் உரைநடை நூலையும், பல கட்டுரைகளையும் இவர் இயற்றியுள்ளார்.

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் உலைந்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுஉளம் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்"

உலக உயிர்களின் துன்பத்தைக் கண்டு இவர் ஏங்கும் ஏக்கத்தை இப்பாடல் புலப்படுத்துகிறது.

இவர் 1823 முதல் 1874 வரை நிலவுலகின்கண் வாழ்ந்தார்.

ஆறுமுக நாவலர்

இவர் யாழ்பாணத்துத் தமிழ்ப் புலவராவார்; சைவத்தை நிலை நிறுத்தவும், தமிழை வளர்க்கவும் அரும் பணியாற்றினார்; பள்ளிப் பிள்ளைகளுக்காகப் பாட நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சென்னையில் அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவிச் சைவ சமய நூல்களையும், இலக்கண நூல்களையும் பதிப்பித்தார்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய சிறு நூல்களுக்கு உரை எழுதினார்: திரு விளையாடற் புராண வசனம், பெரிய புராண வசனம், இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, சைவ வினா விடை முதலியன இவர் இயற்றியனவே. இவர் இயற்றிய நூல்களுள் நன்னூல் காண்டிகை உரை போற்றத்தக்க தாகும். இவர் 1822 முதல் 1889 வரை நிலவுலகில் வாழ்ந்தார்.

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்

டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவராவார். இவர் பல்வேறு இடங்களுக்கெல்லாம் சென்று அலைந்து ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து அவற்றை அச்சுக்குக் கொண்டு வந்தார். இவர் அப்பணியை அன்று