பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழைகள் உட்பட எல்லாரிடமும், கடன் கொள்கின்றனர். இது மதிப்பும் தகுதியும் வாய்ந்ததே. "கடன் கொண்டும் செய்வன செய்" என்னும் பழமொழி இத்தகைய கடன் பற்றியதே.

ஆயின் தேவையில்லாதார் கடன் கொள்ளின் கடனாளி என்னும் பழிப்பும் வீண் வட்டிச் செலவும் உள்பொருட் கேடுமே நேரும். இனி திருப்பித்தரும் ஆற்றலில்லார்

கடன் படினே அவர் பாட்டைச் சொல்லவே வேண்டுவதில்லை.

"கடன் பட்டையோ கடை கெட்டையோ"

"கடனில்லாச் சோறு கால்வயிறு போதும்"

என்னும் பழமொழிகளும்,

"விடன்கொண்ட மீனைப் போலும்

வெந்தழல் மெழுகு போலும்

படங்கொண்ட பாந்தள் வாயிற்

பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட இராம பாணம்

செருக்களத் துற்றபோது

கடன்பட்டார் நெஞ்சம் போலுங்

கலங்கினான் இலங்கை வேந்தன்."


என்னும் கம்பர் செய்யுளும் இதை வலியுறுத்தப் போதியனவாகும்.

ஆகவே கடன்கோடல் ஒரு நிலையில் நன்மையும் ஒரு நிலையில் தீமையும் விளைக்கும் என்பது தெளிவாம்.

                                   8