பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருட்கடன் கோடல் போன்றே சொற்கடன் கோடலும் தேவையும் தேவையின்மையும் ஆகிய இரு வகை நிலைமைகளில் நேர்வதாகும்.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளமின்மையால், அவற்றிற்குப் பிற மொழிகளினின்று கடன்கோடல் இன்றியமையாததாயிற்று. தமிழ் பெருவளமொழியாதலின் அதற்குச் சொற்கடன் தேவையில்லை. தமிழில் இதுவரை புகுந்த அல்லது புகுத்தப்பட்ட அயற் சொற்களெல்லாம்,அதன் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைப்பதற்குக் காரணமாயிருந்தவையே.
இற்றைத் தமிழிற் கலந்துள்ள பிறமொழிச் சொற்களெல்லாம் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல; செந்தமிழ் காக்கும் நக்கீரர் மரபு அற்று ஆரியம் போற்றும் கொண்டான் மரபு ஓங்கி, சேர சோழ. பாண்டியர் ஆட்சியை வேறுபல நாட்டார் கவர்ந்து. மொழியுணர்ச்சியும் வரலாற்றறிவும் தமிழரிடை முற்றும் மறைந்த காலத்து, தமிழ்ப் பகைவரால் தமிழைக் கெடுத்தற்கென்றே புகுத்தப்பட்டவையாம். இது, ஒரு பேதையின் செல்வத்தைக் கவர்தற்கு, ஒரு சூதன் அவனுக்கு வலியக்கடன் கொடுத்து வட்டிமேல் வட்டிக் கணக்கெழுதியதொத்ததே.
சொல்லும், பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற்பெறும் நன்மையை. ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவது போல்.

9