பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்தற்குப் பின்னோரும் புதுச்சொற்களை ஆக்குதல் வேண்டும். இங்ஙனஞ் செய்யாது பிறமொழிச் சொற்களையே வேண்டாது கடன் கொள்பவர், தானும் தேடாது. முன்னோர் தேட்டையும் கடனால் இழக்கும் முழுச்சோம்பேறியையே ஒப்பர்.
தமிழ் இதுவரை கொண்ட அயற்சொற்களால் தளர்ந்ததா வளர்ந்ததா என்பதை, சில சொற்கள் வாயிலாய் ஆய்வோம்.
ஆதன்,உறவி, புலம்பன் என மூன்று அருமையான தென் சொற்கள் இருப்பவும், அவை வழக்கற்று அவற்றிற்குப் பகரமாக ஆன்மா (ஆத்துமா) என்னும் வடசொல்லே வழங்கி வருகின்றது.
பலகணி. சாளரம், காலதர், காற்றுவாரி என்னும் நாற்பழந் தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவை வழக் கொழிந்து அவற்றிற்குப் பகரமாக 'ஜன்னல்' என்னும் போர்த்துக்கீசியச் சொல்லே வழங்கி வருகின்றது.
அடுக்களை,அட்டில், ஆக்குப்புரை (கொட்டகை) சமையலறை, மடைப்பள்ளி (அரண்மனை. கோயில். மடங்களிலுள்ளது) முதலிய பல முதுதமிழ்ச் சொற்கள் இருப்பினும், அவற்றுள் முதலிரண்டும் வழக்கு வீழ்ந்து ஏனையவும் விழுமாறு, 'குசினி' என்னும் ஆங்கிலச் சொல்லும் வழங்கி வருகின்றது.
வடமொழி தேவமொழியென்றும் தமிழ் தாழ்ந்த மொழியென்றும் தவறாகக் கருதி. வேண்டாதும் வரை துறையின்றியும் வழங்கிய வடசொற்களால் வழக்கு வீழ்த்தப்பட்ட தேன்சொற்கள் எண்ணிறந்தன.

10