பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில ஒரு பொருட் தென்சொற்கள் பொருள் தெளிவின்றி மயங்கிக்கிடக்கின்றன.
எடுத்துக்காட்டு :- நெடுமொழி - ஒருவன் தன் பகைவர் முன் தன் வலிமையை எடுத்துக்கூறும் மறவுரை (சம்பிரதம்)

மேற்கோள்-ஒருவன் ஓர் அறத்தைக் கடைப்பிடிப்ப தாகச்செய்து கொள்ளும் உறுதி (பிரதிக்ஞை)

சூள் - ஒருவன் ஒருவர்க்கு ஒரு நன்மையைத் தப்பாது செய்வதாகத் தெய்வத்தின் மேல் இடும் ஆணை.

ஒட்டு-ஒருவன் ஒரு சொற்போரில் வெற்றி, தோல்விபற்றித் தன் எதிரியின் அக்குத்துகட்கு (நிபந்தனைகட்கு) உடன்பட்ட நிலை.

வஞ்சினம் -ஒருவன் ஒரு போரில் தன் பகைவனுக்குத் தான் குறித்ததொன்றைச் செய்யாவிடின், ஒருநிலைமை அடைவதாகக் கூறும் சினமொழி (சபதம்)

பூட்கை - வெற்றி அல்லது இறப்பு வரை ஊன்றிப்பொருவதற்கு அடையாளமாக, ஒரு மதவன்ஒன்றை அணிந்து கொள்ளுதல்.

நேர்ச்சை - ஓர் அடியான், ஒன்றைப் படைப்பதாக அல்லது ஒன்றைச் செய்வதாக தெய்வத்தை நோக்கிச் செய்யும் தீர்மானம்

நோன்பு -ஓர் அடியான், வழிபாட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பசி. தாகம் முதலியவற்றால நேரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறை(விரதம்.)

கடைப்பிடி - ஒரு கொள்கையை இறுதி வரை உறுதியாய்க் கொண்டு நடத்தல், (வைராக்கியம்)

19