பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

11

நாடகமாகப் பார்க்கிறார்கள்; சித்திரமாகக் கண்டு களிக்கிறார்கள்; தெய்வமாக உற்சவமாகத் தரிசித்து இன்புறுகிறார்கள்.

பழைய இதிகாச புராணங்களை இன்றும் இலக்கிய வல்லுநர்கள் ஆவலுடன் படிக்கிறார்கள். பொதுமக்கள் அவற்றிலுள்ள கதைகளைக் கேட்கிறார்கள். தமிழ்நாடு இதற்கு விலக்கன்று. அந்த இதிகாச புராணங்கள் கவியாகவும் கதையாகவும் இங்கு வழங்கி வருகின்றன.

புராணக் கதைகள்

மிழ் நாட்டின் சிறப்பியல்பு மற்றொன்று உண்டு. இங்கே தெய்வத் திருக்கோயில்கள் பல. பல்லவர் காலத்தில் தொடங்கிய கோயில் திருப்பணி சோழர் காலத்தில் படர்ந்து, விஜயநகர அரசர் காலத்தில் விரிந்து, இன்றும் போற்றப் பெற்று வருகிறது. திருக்கோயில்களைப் பற்றிய அருட் பாடல்களைக் கேட்ட தமிழ் மக்கள் அக் கோயில்களைச் சுற்றி எழுந்த கதைகளையும் கேட்டார்கள். தல புராணங் களைக் கேட்டார்கள். அந்தப் புராணங்கள் பழையவை அல்ல. புராணம் என்று பெயர் இருந்தாலும் அவை புதியனவாகப் படைக்கப்பெற்றவை. தலங்களின் பெருமையைக் கூறுவன அவை. 'இந்தத் தலத்தின் பெருமை சிறந்தது, இதில் வழிபட்டால் இந்த நன்மை உண்டு' என்று பொதுவாகச் சொல்லிக் காட்டுவதைவிட, இன்ன அன்பர் இன்னது செய்தார், இறைவன் இவ்வாறு அருள் செய்தான் என்ற கதை வடிவத்தில் இருப்பதால் தலத்தின் பெருமை மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்தது, இலக்கியச் சுவை இருப்பினும் அதன் பொருட்டு அந்தப் புராணங்கள் எழவில்லை. தலத்தின் பெருமையை விளம்பரப்படுத்தும் பிரசார வடிவமாகவே அவை எழுந்தன. ஆதலால் அந்தக் கதைகள் மக்கள் மனத்தில் ஏறின. சில பெரிய தலங்களின்