பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

71

கமலாம்பாள் சரித்திரம் அசல் தமிழ் நாட்டின் குடும்பக் கதை. கிராமத்தின் மண்ணிலே படரும் கதை. சென்னையும் காசியும் இடையிலே வருகின்றன. கதையில் சிக்கலை உண்டாக்குவது, கதாநாயகியாகிய கமலாம்பாளைப் பற்றிய வீண் அபவாதம். அந்த அபவாதம் தோன்றுவதற்கு நிலைக்களமாகிய முன்னை நிகழ்ச்சிகளும், அபவாதம் தோன்றிய பின் அதன் விளைவுகளும், பிறகு அபவாதம் அபாண்டமானது என்ற தெளிவும் கதையை நடத்துகின்றன. கதையை முதலில் எழுதிய காலத்தில், ஆபத்துக்கு இடமான அபவாதம் அல்லது ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்று பெயர் கொடுத்திருந்தார் ஆசிரியர் என்பதை நாம் நினைவு கூர்தல் வேண்டும்.

கதைச் சுருக்கம்

தாநாயகி கமலாம்பாள்; கதாநாயகர் முத்துசாமி ஐயர். முத்துசாமி ஐயருடைய பெண் லக்ஷமிக்குத் திருமணம் நிச்சயம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. மதுரையிலுள்ள ஶ்ரீநிவாசன் என்ற பையனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். முத்துசாமி ஐயருடைய தம்பி மனைவி பொன்னம்மாள் அவளைத் தன் தம்பி பிள்ளைக்குக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். அது இயலாமையினால் கோபமும், ஓரகத்தியின் வாழ்வில் பொறாமையும் உண்டாகின்றன. பிறர் கூறும் கோளும் அவற்றைப் பெருக்குகின்றன. சுப்பிரமணிய ஐயர்- முத்துசாமி ஐயரின் தம்பி-தம் மனைவியின் ஆணைக்கு அடங்குபவரானாலும் தமையனரிடத்திலும் மரியாதையுடையவர். அவரைத் தம் வசமே ஆக்கிவிட வேண்டுமென்று எண்ணிய அவருடைய மனைவி வசிய மருந்து இடுகிறாள். ஜல்லிக்கட்டில் உண்டான போட்டியினால் சுப்பிரமணிய ஐயரிடம் பகை கொண்ட கோமள நாயக்கனூர் ஜமீன்தார்.