பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நெடுநல்வாடை

பத்துப்பாட்டில் ஏழாவது பாட்டாக இருப்பது நெடுநல்வாடை என்ற நூல். 188 அடிகளை உடைய அந்த நூலை இயற்றியவர் நக்கீரர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்ற இரண்டு நூல்கள் பத்துப்பாட்டில் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் போர்த்தொழிலில் விருப்பமுடையவனாகி இருந்தமையால், அவன் போகத்தை மறந்து போர்க்களப் பாசறையில் இருக்கிறான். அவனுடைய மனைவி அவன் பிரிவை ஆற்றாமல் தனிமைத் துயரால் வாடுகிறாள். அவளுடைய வாட்டம் தீருமாறு 'பாண்டியன் போரில் வெற்றி பெற்றுத் திரும்புவானாக!' என்று மகளிர் துர்க்கையை வேண்டிக்கொள்ளும் பாணியில் அமைந்துள்ளது இந்தப் பாட்டு.

நெடுஞ்செழியனை வெளிப்படையாக இந்தப் பாட்டில் எங்கும் நக்கீரர் குறிப்பிடவில்லை. "வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்" என்று, அவனுடைய வேலையும் அதில் அவனுடைய அடையாளமாலையாகிய வேப்பந்தார் இருப்பதையும் சொல்லியிருக்கும் குறிப்பினால் நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டு என்பது தெரியவரும். அந்தக் குறிப்பு இல்லாவிட்டால் இந்தப் பாட்டு அகத்துறை அமைந்தது என்று சொல்லலாம். குறிப்பாக வேனும் வெளிப்படையாகவேனும் ஒரு குறிப்பிட்ட தலைவனை