பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வெட்டுக் காயம் ஆற

பால்கத்தி இலையைத் தண்ணிர் விடாமல் அரைத்து, வெட்டுக் காயத்திலும் அடிபட்ட காயத்திலும் வைத்துக் கட்ட, உடனே குணம் ஆகும். ஒரே வேளைக்கட்டு போது மானது. பால்கத்தி இலைக்கு அடையாளம், அதன் காய் தண்ணிர் பட்டதும் வெடிக்குத் தன்மையுடையது. பிள்ளைகளும் அக்காயை நெற்றியில் வெடிக்கவைத்து விளையாடுவதுண்டு.

கிரந்தி நோய்க்கு

சில குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுதே கிரந்தி நோய் கண்டிருக்கும். அப்போது அதன் மேனி ஊதா நிற மாகக் காணப்படும்; அவ்வாறு இருந்தால், சமுத்திராப் பச்சிலை ஒன்றைக் கொண்டுவந்து, அதன் நடுமட்டையை எடுத்துவிட்டு, இலையில் விளக்கெண்ணெயைத் தடவி, வெது வெதுப்பர்க அனலிற் காட்டி, குழந்தையை அந்த இலையிற் போட்டுவிடவும். இயன்றவரையில் அதன் உடம்பெல்லாம் இலையிற் படும்படி உருட்டிவிடவும் 15 நிமிடத்திற்குமேல் இலையில் கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஒருவேளை செய்வது போதுமானது. வியக்கத் தக்க முறையில் குணங்காணும்.

சமுத்திராப் பச்சிலை என்பது சேம இலைபோல மிகவும் பெரியதாயிருக்கும். பெரிய இடத்துப் பங்களாக்களில் தொட்டிகளில் வைத்து வளர்ப்பதுண்டு.

கட்டிகள் உடைய

சப்பாத்திப் பூவைக் கழுவி அம்மியில் வைத்து அரைத்துப் பூசினால், கட்டிகள் உடைந்துவிடும்; அல்லது கரைந்து போய்விடும். வியக்கத்தக்க முறையில் குணத்தை காணலாம்.