பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

199

விலுள்ள பெரிய சமவெளிகளில் வந்து தங்கிவிட்டனர். தமிழர்கள் தெற்கு முகமாக நோக்கி வரும்பொழுது பன்னெடுநாட் பிரயாணஞ் செய்ய வேண்டி யிருந்தமையின் அவர்களுட் சிலர் இளைப்படைந்து இனிமேற் போதல் இயலாதென்று எண்ணி அங்கங்கே தங்கி விட்டனர் .

இப்படி அங்கங்கே நின்றுவிட்டோர் தமிழ்மொழியின் பாகதங்களை இன்னும் பேசிக்கொண்டு வாரா நிற்கின்றனர். வடமேற்குச் சிந்துநதிச் சமவெளியில் ஒருசாதியாரும் விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் மற்றொரு சாதியாரும் தமிழின் பாகதங்கள் இன்னும் பேசுகின்றனர். இனி இவ்வாறின்றித் தமிழர் இந்திய சுதேசிகளே யென்று கொள்வாருமுளர். வேறு சிலர் கடல் கொள்ளப்பட்ட ‘இலெமுரியா’ வென்னும் நாட்டினின்றும் தமிழர் பரவி இந்தியாவினுட் புகுந்தனரென்பர். முதன் முதலில் தமிழர்கள் எல்லோரும் ‘தமிழ்’ என்ற ஒரே பாஷையைப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்தபின்னர் அவர்கள் பேசிய பாஷை சிறிது சிறிதாக மாறுதலடைந்தது. ஒரே தமிழ்ப் பாஷையைப் பலவேறு விதங்களாகப் பேசத் தொடங்கினர்.

இவ்வாறு தமிழ்ப்பாவையின் வழிமொழிகளாகித் தனித் தனி இயங்கப் புகுந்தனவற்றுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய நான்கும் தலைநின்றனவாம். இக்கருத்தினையே காலஞ் சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை யவர்கள் தமது ‘மனோன்மணீய’ நாடக நூலில் தமிழ்த்தெய்வ வணக்கங்கூறு மிடத்து,

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற்
கன்னடக் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”

என்ற இனிய பாவடிகளிற் கூறி வற்புறுத்துதல் காண்க. மொழி நூற்புலமையும் வடநூற்புலமையும் ஒருங்கே நடாத்திக் காலஞ்சென்ற சேஷகிரி சாஸ்திரியாரவர்களும் தாமெழுதிய ‘ஆந்திர சப்ததத்துவம்’ என்ற நூலின் கண்ணே தெலுங்கிற்குத் தாய் தமிழென்றே கூறி அமைக்கு மாற்றையுங் காண்க.

தமிழர்கள் துரானியர்களால் வென் றடக்கப்பட்ட போது அத்துரானிய பாஷைச் சொற்களிற் சில தமிழ்ப் பாஷையின் கண்ணே புகுந்திருத்தலு மியல்பே, இனித் துரானியரை வடக்கிருந்து போந்த ஆரியர் வென்று துரத்தலும், அவர்கள் தெற்கே வந்து தமிழர்களுடன் கலப்பாராயினார். அப்பொழுதுஞ் சில துரானியபாஷைச் சொற்கள் தமிழ் மொழியின் கண்ணே இடம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே தமிழ்ப்பாஷையின்கண் முதன்