பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

201

ஷியர்கள் பலமயில்களைத் தம்மரசன் சாலமோனுக்காகக் கொண்டு சென்றுழி இத்தமிழ்ச் சொல்லையுங் கொண்டு சென்றனர், எகிப்தியருந் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களுடன் கி. மு. 500-க்கு முன்னரே வாணிகஞ்செய்து வந்தனரென்பது மலையிலக்கே. அங்ஙனம் அவர்கள் வடமேற்றிசை யாரியர்களோடு வாணிகஞ் செய்யப்புகுந்தபோது கணக்கு முதலியன குறித்தற்கும் சிறு விஷயங்க ளெழுதுவதற்கும் எழுத்துஞ் சுவடியும் அவர்கட்கு இன்றி யமையாதனவாயின. ஆகவே அவர்களே நெடுங்கணக்கு வகுத்தனர். அந்நெடுங் கணக்குத் தமிழ் நாடெங்கும் பரவிற்று. அதுமுதற் பேச்சுவடிவின் மட்டி இருந்த தமிழ்ப்பாஷை ஏட்டுவடிவு மடைவதாயிற்று.

பேச்சு வழக்குத் தமிழ் ஏட்டு வழக்கும் அடையும்போது சிறிதளவு வேறு பட்டே யிருத்தல் வேண்டும். அஃதாவது பேச்சுத் தமிழ் எழுதப்படும் போது திருத்தியே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஏட்டுவழக்குத் தமிழும் பேச்சுவழக்குத் தமிழும் என்றும் ஒன்றாயிருந்ததில்லை. எனவே ஏட்டுத்தமிழ் தான் இருந்தவாறே என்றும் பேசப்படவில்லை. இப்பொழுது பண்டைநூல்களிற் காணப்படுகின்றபடியே அக்காலத்துச் சாமானிய சனங்களும் பேசினார்களென்பது பொருந்தாது.

முற்காலத்திற் சுவடியை ‘நெடுங்கணக்கு’ என்று கூறுதலும் எழுத்தறிவிக்கும் ஆசிரியனைக் ‘கணக்காயன்’ என்றுகூறுதலுங் காண்க.

“கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்
பெற்றதாம் பேதையோர் சூத்திர—மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித் தன்
புல்லறிவு காட்டி விடும்”

என்ற ‘நாலடியா’ரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க. தமிழர்க்கு, ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப்படிக்கத் தெரியும். ‘எழுத்து’ ‘சுவடி’ யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டன ரென்பதும் பொருந்தாமையறிக.

இனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழவேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும், தமிழர் சம்ஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். சம்ஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை வடமொழி யென்று உரைப்பாராயினார். அது ‘வடமொழி’ யென்னப் பட்டவுடனே தமிழ்மொழி ‘தென்மொழி’ யெனப்படுவதாயிற்று. தமிழரும் ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமைபற்றி அவ்விருவர் பாஷைகளும் சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமிழொடு, மருவு முன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி