பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

207

பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடையனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிக ளெல்லாம் பொருணோக்கப் பால் வகுப்புச் சிறப்புடையன. இவ்வுண்மை யொன்றே தமிழ் மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்க சான்று பகரும்.

அன்றியும்,
“கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவு மியற்றுந போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே”

என்ற நன்னூற் சூத்திரவிதியிற் கூறப்பட்டுள அணி கலன் ஆரியபாஷைச் சொற்களுக்குப் பெரும்பாலும் இல்லாது போதல் காண்க. அணி நூற் புலவர் முன்னர் ஆரியபாஷைக்கு அஃதோ ரிழுக்காகுமன்றே?

அகப்பொருளும் அதன் றுறைகளும், புறப்பொருளும் அதன் றுறைகளும், இவ்விருவகைப் பொருள்களினியைபுகளும் வடமொழியினின்றும் என் றென்றும் கிடைத்தலியலாத அரிய தனித் தமிழ் விஷயங்களாம். இவற்றினின்றும் ஆதியிலிருந்த தமிழர்களது ஒழுக்க நிலை இத்தன்மைத் தென்பதும், அவர்களது நாகரிக நிலை இத்தன்மைத் தென்பதும் நன்கு விளங்குகின்றன.

வடமொழியின் ‘இலகு குரு கணையதி விருத்தம்’ என்ற பாகுபாடுகட்குத் தமிழிலிடமேயில்லை. தமிழின் நால்வகைப் பாக்களும் மூவகைப் பாவினமும், அவற்றின் பாகுபாடுகளும், எதுகை மோனை நியமங்களும், அசை, சீர், தளை ஆகியவற்றி னியல்புகளும் தமிழ்மொழிக்கே யுரியன. இவை வடமொழிக்கட் காணப்படுவனவல்ல. தமிழிற் ‘பா’ என்றத னிலக்கணமே மிகவும் இனிமை பெற வமைத்துளது. “பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும், ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஓசை” என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இது வட மொழியாளர்க்குப் புதுமையாம்.

தொல்காப்பியனார் யாப்பணிகளைப் பொருளதிகாரத்திலேயே அடக்கிச் சூத்திரஞ் செய்து சென்றனர். அதன்கண் ‘அணியியல்’ என்ற பெயரே காணப்படாது, ‘உவமவியல்’ என்ற தொன்று அதற்குப் பிரதியாகக் காணப் படுகின்றது. அவ்வுவமவியல் தானும் இக்காலத்தி லுலவுகின்ற அணிநூல்கள் போலாது மிகச் சுருங்கியதாய்ச் சிற்சில பொது தருமங்களை மட்டில் விரித்துக் கூறி, உவமவுருபுகளும் அவை வழங்குமாறும் இவையெனச் சுட்டிச் செல்லா நின்றது. இவ்விஷயத்தை இக்காலத் தியங்குறும் அணி நூல்களோடு ஒத்து நோக்குமிடத்துத் தமிழ் மொழி வடமொழிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள தென்பது தேற்றம். தமிழ்ப் பாடினியைச் சம்ஸ்கிருதப் பாணன் அணிந்து புனைந்தமை வெளிப்படை.