பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

மொழி தமிழேயா மென்று கூறி, அதன் தொன்மை மாட்சி நிறுத்தி விட்டேமென மகிழ்வாருமுளர்.

“பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்டதாயும் நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவை வானரர்காள்! போய்க் காண்பீர்” என வான்மீகி முனிவர் கூறுகின்றமையானும் வியாத முனிவரும் ‘மகாபாரதத்’ தின் கண்ணே தமிழ்நாட்டின் சிறப்பையும் பாண்டியர் அரசையும்பற்றிக் கூறுகின்றமையானும், பாண்டியர் ஆண்ட நாட்டின் தொன்மையும் அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றாற் றெளியப்படுமாறு காண்க.

இற்றைக்குச் சற்றேறக் குறையப் பதினாயிரம் வருஷங்கட்கு முற்பட்ட பழமையான எழுத்துச் சாதனங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் கி.மு. எண்ணாயிர வருஷங்களுக்கு முன்னரே மக்களுக்குள் நாகரிகம் தொடங்கியிருக்க வேண்டும். இவ்வளவுகாலம் முன்னரென்பது வரையறுத்துரைக்க முடியாதாயினும் எழுத்து வழக்கு இதற்கும் முன்னரே யேற்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறாயின் பாஷைத் தோற்றத்தின் காலம் இத்துணையாயிரம் ஆண்டுகட்கு முன்னரென்பது யாவரான் வரையறுத்துக் கூறவியலுமோ? அறியேம். பாஷை முலம் நதிமூல ருஷி மூலங்கள் போலும்!

இனித்தமிழ் நூல்களிற் பல இடைச்சங்கமிருந்த கபாடபுரங் கடல் கொள்ளப்பட்ட காலத்தில் அழிந்துபட்டனவெனக் கூறக் கண்டுளேம். அஃதன்றியும் தமிழில் மிகப்பழங்காப்பியமென அறிவுடையோர் பலரும் ஒத்தெடுத்த ‘சிலப்பதிகார’த்திற் காடுகாண் காதையில் ஆசிரியர் இளங்கோ வடிகள்

“வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”

என்றார்; இனி, வேனிற்காதையில், “நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமும்” என்புழி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்குங் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதநாடும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குண காரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரிப் பௌவமென்றார்” என்று கூறினார். இன்னும் ‘புறநானூற்றிற்’ பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாட்டிற் ‘பஃறுளியாறு’ வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் உண்டாக்கப்பட்டதென்பது குறிக்கப்பட்டுள்ளது. சின்னாண் முன்னர் வெளிப்பட்ட ‘செங்கோன்றரைச் செலவு