பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

243

என்ற இனிய சிறிய நூல் காரணமாகவேயாம். இந்நூல் 425 வெண்பாக்களிற் காப்பியச் சிறப்புகளமையச் சொற் பொருணயங்கள் செறியச் செய்யப் பட்டுள்ளது. இதன் நடை மிகத்தெளிவானது. ஔவையார் ‘நல்வழி,’ ‘நீதிவெண்பா’ என்ற நீதி நூல்களியற்றினர். பன்னிரண்டாம் நூற்றாண்டிற் செயங் கொண்டானாற் ‘கலிங்கத்துப்பரணி’ இயற்றப்பட்டது. இக்காலத்திலேயே, ‘கந்தபுராணம்,’ ‘பெரிய புராணம்’ என்ற அருமையான சைவ நூல்களேற்பட்டன. ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் வெளிப்பட்டதும் இக்காலமாம். பின்னர்த் திருவெண்காட்டடிகள் என்னப்படும் பட்டினத்துப் பிள்ளையாரது பாடல்கள் வெளிவந்தன. தண்டியாசிரியர் இயற்றிய ‘அலங்கார’மும் இக்காலத்திலே யுண்டாயிற்றென்க. உரையாசிரியர்களாகிய சேனாவரையர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் இவர்கள் விளங்கிய காலமும் இதுவேயென ஊகித்தற்கிடனுண்டு.

முற்காலத்துச் சங்க நூல்களெல்லாம் இயற்கை வனப்பையும் புனைந்து கூறிச் சென்றனவாக, இடைக்காலத்து முற்பகுதி நூல்கள் சமயச்சார்பாகவும் பிற்பகுதி நூல்கள் மனோபாவத்தினாற் கற்பித்தும் சுதந்திர யூகத்தினாற் புதுவது புனைந்தும், உயர்வு நவிற்சியாதிய அணிகள் மேவியுஞ் செல்வனவாமாறு காண்க.

III. பிற்காலம்: கி.பி. 1400-க்கும் பிற்பட்ட காலம்.

ஆதிகாலத்துச் சங்கத்தார் ஆதரவும் இடைக்காலத்துச் சிற்றரசர் ஆதரவு மிகுந்தன. அவ்விருவகை ஆதரவு மற்ற இப்பிற்காலத்தில் குறுநிலமன்னர் சிலரும் திருவா வடுதுறை முதலிய ஆதீனத்தார் சிலரும் தமிழையுந் தமிழ்ப் புலவரையும் போற்றிப் பாதுகாப்பாராயினர். அதிவீரராமபாண்டியரும் வரதுங்கராம பாண்டியரும் இருந்து பலவகைத் தமிழ்நூல்கள் செய்தனர். ‘நைடதம்,’ ‘கூர்மபுராணம்,’ ‘காசிகாண்டம்’ முதலிய அரிய நூல்களை யியற்றினர்; வரதுங்கராம பாண்டியர் ‘இலிங்கபுராணம்’ ‘திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி’ முதலிய நூல்களியற்றினர். இவ்விருவருக்கும் ஆசிரியராகிய நிரம்பவழகிய தேசிகர் ‘சேதுபுராணம்’ ‘திருப்பரங்கிரிப் புராணம்’, என்ற நூல்கள் யாத்தனர். இதற்கிடையில் வில்லிபுத்தூரர் வடமொழியினின்றும் ‘பாரத’த்தை மொழிபெயர்த்தனர். [ சங்கப் புலவரு ளொருவராகிய பெருந்தேவனார் செய்த ‘பாரதம்’ உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அறை குறையாய் அகப்படுகின்றதெயன்றி முற்றுங்காணப்படவில்லை.] ‘வில்லிபுத்தூரர் பாரதம்’ பத்துப் பருவத்துடன் நின்று விட்டதெனினும், இனியவாக்கும் நல்ல சந்தமும் பயின்று சொல்லுதலாற் பலராலும் பாராட்டப் படுவதாயிற்று. வில்லி புத்தூரரது கர்வ பங்கத்திற்குக் காரணரா யிருந்தவரெனக் கூறப்படும் அருணகிரி நாதர் ‘திருப்புகழ்’ என்ற பெயரில் முருகபிரான்மீது அளவிறந்த பாசுரங்கள் பாடித் தமிழ்நாடெங்கணும் முழங்குமாறு செய்தனர். திருப்புகழ்ப் பாசுரங்களனைத்தும் சந்த நலங்கொழித்துக் கேட்போருள்ளங்களைத் தம் வயப்