பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

படுத்தி இன்பச்சுவையும் பத்திரசமுந் துளிப்பச் சொல்லா நின்றன. [இத்திருப்புகழின் முதலிரண்டு பாகங்கள் வ.த. சுப்பிரமணிய பிள்ளையவர்களது முயற்சியால் வெளிப்போந்துள.] அருணகிரிநாதர் ‘கந்தரந்தாதி’ பாடி வில்லிபுத்தூரரைக் கர்வபங்கப் படுத்தின ரென்ப. வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரும், அட்டாவதானி -அரங்கநாத கவிராயரென்பாருந் தனித்தனி ‘வில்லி பாரத’த்தைப் பூர்த்திசெய்தனர். இவற்றுட் பின்னது வெளிப்பட்டுள்ளது. பின்னர் நல்லாப்பிள்ளை யென்பார் தோன்றி வில்லிபுத்தூரர் பாடல்களை இடையிடையே செறித்து, அவர் சுருக்கிக்கூறிய கதைகளைத் தாம் விரித்தும் அவர் விட்டுவிட்ட கதைகளைக் கூட்டியும் ஒரு பாரதம் 14,000 செய்யுட்களிற் பாடிமுடித்தனர். ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ அச்சாகியும் விசேஷமாய்ப் பயில வழங்கவில்லை. மதுரைத் ‘திருவிளையாடற் புராண’த்தைக் கல்வி நலம் விளங்கப் பத்திச்சுவை யொழுகப் பரஞ்சோதி முனிவர் பாடினர்.

இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாரால் தமிழ் மொழியடைந்த அபிவிருத்திக்கோ அளவில்லை. ‘கல்விக்களஞ்சியம்’ திருவாவடுதுறை யென்று கூறுவது எவ்வாற்றாலும் ஏற்புடைத்தேயாம். அருணந்தி சிவாசாரியார், உமாபதி சிவாச்சாரியார் முதலாயினாராற் ‘சைவசித்தாந்த சாஸ்திரங்கள்’ முன்னரே வெளிப்பட்டன. இம்மடத்தைச் சார்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை ‘கல்லாடவுரையும்’, ஈசானதேசிகர் ‘இலக்கணக் கொத்துரை’யும் சங்கர நமச்சிவாயப்புலவர் ‘நன்னூல் விருத்தியுரை’யும் சிவஞான முனிவர் ‘சித்தாந்த மரபு கண்டன கண்டனம்’, ‘தொல்காப்பியச் சூத்திரவிருத்தி’, ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ என்ற நூல்களுஞ் செய்தனர். தருமபுர வாதீனத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர் ‘குட்டித் தொல்காப்பியம்’ எனப்படும் ‘இலக்கணவிளக்கம்’ இயற்றினர். இவருதவிகொண்டு மாதைத்-திருவேங்கட மன்னன் வடமொழியிற் ‘கிருஷ்ணமிசிரன்’ செய்த ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற நாடகத்தைக் காப்பிய ரூபமாயமைத்தனன். இது நகைச்சுவை பெரிதும் நண்ணியதோர் விநோதமானநூல்; மிகவுந் தெளிவான செய்யுணடையில் இயற்றப் பட்டுளது. இது நிற்க.

சிவஞான முனிவர் பல அருமையான செய்யுணூல்கள் செய்தும், தருக்கநூல் இயற்றியும், சித்தாந்த சாஸ்திரங்களுக்கு உரைவகுத்தும், இலக்கணநூல் புனைந்தும், கண்டனங்கள் வெளியிட்டும், மாணாக்கர் பலர்க்குத் தமிழறிவுறுத்தியும் விளங்கிய மகாவித்துவச் சிகாமணி. இவர்புகழ் பரவாத மூலையில்லை; வடமொழியும் ஒருங்குணர்ந்தவர். இக்காலத்து ‘வரலாற்று முறையிற் கற்ற வித்துவான்கள்’ என்போரது வரலாற்றை ஆராய்ந்தால் இவரிடத்தே வந்து முடியும். இவர் மாணாக்கருட் சிறந்த கச்சியப்ப முனிவர் ‘தணிகைப் புராணம்’ ‘விநாயகபுராணம்’ முதலிய நூல்கள் பாடித் திருத்தணிகைக்-கந்தப்பையர்க்குத் தமிழறி வுறுத்தினர். இலக்கணம்- சோமசுந்தரக் கவிராயர்