பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

245

இராமநாதபுரஞ் சென்று ஆண்டுத் தமிழ்க் கல்வியைப் பரப்பினர். ‘திருக்கழுக்குன்றக் கோவை’ செய்தார் இவரே

இராமநாதபுரத்திற் சேதுகாவலர்கள் இன்றளவுந் தமிழ்மொழியை வளர்ப்பாராயினர். அமிர்த கவிராயர் என்பார் இரகுநாத சேதுபதியின்மீது ‘ஒருதுறைக்கோவை’ பாடினர்.

சிவப்பிரகாச சுவாமிகள் ‘கற்பனைக்கு ஊற்று’ எனக் கருதப்படும் ‘பிரபுலிங்க லீலை’யும் ‘வெங்கைக்கோவை’யும் ‘நன்னெறி’ முதலிய பலநூல்களும் செய்தனர். தருமபுரவாதீனத்தைச் சார்ந்த குமரகுருபர சுவாமிகள் ‘மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்’, ‘நீதிநெறிவிளக்கம்’ முதலிய பலநூல்கள் சொற்பொருணலங்கனிய இயற்றினர். பத்திச்சுவை மிகுந்து யாவருள்ளத்தையுங் கவர வல்ல தத்துவராயரது ‘அடங்கன் முறை’யும் ‘பாடுதுறை’யும் தாயுமானார் செய்த ‘திருப்பாடல்க’ளும் மிகவுங் கவனிக்கவேண்டியனவாம். ஏறக்குறையத் தாயுமானார் காலத்திலேயே வீரமாமுனிவர் என்பவர் ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கணமும் ‘தேம்பாவணி’யென்னுங் காவியமும் செய்தனர்.

இனி வைணவருள் ‘திவ்யகவி’ என்றழைக்கப்படும் பிள்ளைப் பெருமாளையங்கார் தோன்றிச் சொல்லின்பமும் ஒருங்கேயமைய ‘அட்டப்பிரபந்தம்’ என எட்டு நூல்கள் செய்தனர்.

சைவ-எல்லப்ப நாவலர் ‘திருவாரூர்க் கோவை’, ‘அருணாசல புராணம்’, ‘அருணைக் கலம்பகம்’ முதலிய சில நூல்களியற்றினர். மேலகரம்-திரிகூட ராசப்பக் கவிராயர் ‘திருக்குற்றாலத் தலபுராணம்’ முதலிய பல நூல்கள் செய்தனர்.

இனிப்பலர் அந்தாதிகளும், கலம்பகங்களும், பிள்ளைத் தமிழ்களும், சிலேடை வெண்பாக்களும், மாலைகளும், பதிகங்களும், ஆகப் பலப்பல நூல்கள் தாந்தாங் கண்டவாறு புனைந்து விட்டனர்.

அதன்மேல் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்த திரிசிரபுரம்-மகா வித்துவான் -மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் தோன்றிக் கணக்கற்ற நூல்கள் யாத்தும் பல்லோர்க்குத் தமிழ் நூல்கள்பல பாடஞ்சொல்லியும் தனிப்பாடல்கள் பல பாடியும் விளங்கினர். இவர் செய்தநூல்களுள் ‘திருநாகைக் காரோணப் புராணம்’ பெரிதும் பயிலுகின்றது.

தமிழ்மொழியின் செய்யுணடை நூல்கள் இவ்வாறாக வசனநடை நூல்களின் தோற்றத்தையும் சிறிது குறிப்பாம். தமிழில் வசனநடையானது உரையாசிரியர்களாலேயே நூலுரைகளிற் பயிலப்பட்டு வந்தது. வசனநடையை ‘உரைநடை’ யென்றலும் வழக்காறாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய ‘பெருந்தேவனார்பாரதம்’, ‘சிலப்பதிகாரம்’ என்ற நூல்களிலே உரைநடை காணப்படுகிறது. வடமொழியிற் கத்திய காவியங்களிருத்தல் போலத் தமிழ்மொழியின்கண்ணே வசனகாவியங்கள் காண்டலரிதாம். ‘ஸ்ரீபுராணம்’, ‘கத்தியசிந்தாமணி’ முதலிய சைன நூல்களுட் சில வசனநடையினவாம். இவ்வாறு சைனர்களால் வசனநடையில் இரண்டொரு நூல்