பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

செய்யப்பட்டனவேயன்றி மற்றையோர்களால் அது பெரிதும் பயிலப்படாமைக்குக் காரணமென்னோ? நன்குபுலப்படவில்லை. இனிச்சிலர் இவ் வுரை நடையையும் ஒருவகைச் செய்யுளெனக் கருதிச் சூத்திரஞ் செய்தனர்.

“பாட்டிடை வைத்த குறிப்பினானும்
பாவின்றெழுந்த கிளவி யானும்
பொருளொடு புணராப் பொய்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்
றுரைவகை நடையே நான்கென மொழிப.”

என்றார் இலக்கணவிளக்கப் பாட்டியலுடையார். இனி அச் சூத்திரவுரையில் “ஒருபாட்டின் இடையிடைகொண்டு நிற்கும் கருத்தான் வருவன உரையெனப்படும்; என்னை? பாட்டுறுவது சிறுபான்மையாகலின், அவை ‘தகடூர் யாத்திரை’ போல்வன. மற்றுப் பிறபாடை விரவிவருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின ஈண்டு அடங்கும். பிறபாடைக்கு ஈண்டு ஆராய்ச்சியின்று. பாவின்றெழுந்த கிளவி பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப் படாவோ வெனின்? படா; பாட்டும் உரையும் நூலுமென வேறோதினமையின். இதனாற்போந்தது சொற்சீரடியான் இற்ற சூத்திரம் உரைச்செய்யு ளென்பதாம். பொருளொடு புணராப் பொய்ம்மொழி பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. பொருளொடு புணர்ந்த நகைமொழி பொய்யெனப்படாது மெய்யொடுபட்டு நகுதற்கு ஏதுவாகுந் தொடர்நிலை. இந்நான்கும் உரைச்செய்யுளென்று கூறுவர் புலவர்” என்றார் தியாகராச தேசிகர். இவ்வாறு வசனநடையும் ஒருவகைச் செய்யுணடையாகப் பாவிக்கப்பட்டு வந்தால் அதற்குரிய தனித்தியங்கும் நிலைமையும் அற்றுக், கட்டுப்பாடுடையதாகின்றது. இது மிகவும் பரிதபிக்கத் தக்கதோர் விஷயம். இடைக்காலத்தில் உரையாசிரியர்களானன்றி ஏனையோரால் இவ்வசனநடை பெரிதும் பயிலப்படா தொழிந்திருந்தது. பிற்காலத்துப் போந்த வீரமா முனிவர் ‘வேதியரொழுக்கம்’, ‘அவிவேக பூரண குருகதை’ என்ற வசனநூல்கள் இயற்றினர். இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாராற் பல கண்டன நூல்கள் வசன நடையிலியற்றப்பட்டு வெளிப்போந்தன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்க முதல் தமிழில் வசனநடை விசேடமாய் வழங்கப்படுவதாயிற்று. அதன்மேல் இக்காலத்தில் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் முதலிய வித்துவான்கள் இவ்வசன நடையைப் பெரிதும் போற்றி அதன்கட் பலநூல்கள் இயற்றி வெளியிடுவாராயினர். இப்பொழுது அச்சியந்திரத்தின் உதவியால் நாடோறும் பலவசன பத்திரிகைகளும் வாரந்தோறும் சிலநூல்களும் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகும் வசனநடை நூல்களிற் பெரும்பாலன சாமானியஜன விருப்பத்திற்கு ஏற்றவைகள். சிற்சில நூல்களே பண்டிதர்கள் பாராட்டத்தகுவன. எனினும்