பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

247

பாஷையின் கண்ணே நூல்கள் பல வெளிப்பட்டக்கால் அவை தாந்தாம் பதிப்பிக்கப்படுந்தோறுந் திருத்தமுற்றுப் பிறர்க்கு நலம்பயக்கும் ஆதலின் எவையும் கடியப்படுவன வல்ல. சாமானிய ஜனங்களைத் திருத்துவதற்குச் செய்யுள் நூல்களினும் வசன நூல்களே மிகவும் உபகாரமுடையனவா யிருத்தலின் வசன நூல்களை அறிவுடையோர் சிலர் விசேடமாக மதிக்கின்றனர்.

நூற்பரப்பு முற்றிற்று.
 

 
IX. பாஷையின் சீர்திருத்தம்.
 

 

ரவை வழக்குள்ள பாஷைகளெல்லாம் சதா இயங்கிக் கொண்டிருப்பதனாலே, தங்களியக்கத்திற்குத் தக்கபடி நாகரிக நிலைக்குரிய புதிய கருத்துக்களை மேற்கொள்ளுமென்பது திண்ணம். புதிய கருத்துக்கள் மேற் கொள்ளப்பட்டால், அவற்றைத் தங்களது குறிக்கவல்ல சொற்களுஞ் சொற்றொடர்களும் பாஷையின்கண் ஏற்படுதல் இன்றியமையாததே.

உட்கருத்தின் வேறுபாடு வெளிச் சொல்லிற் பிரதிபலிக்கும்; ஆதலால் மநோபாவம் விரியுந்தோறும், புதுவிஷயங்கள் கண்டுபிடிக்கப் படுந்தோறும், கலைஞானவுண்மைகள் வெளிப்படுந்தோறும், வேற்றுநாடுகளினின்றும் புதிய பொருள்கள் உட்புகுந்தோறும், பாஷை விரிந்து முதிர்ந்து சீர்திருந்துதல் வழக்காறேயாம்.

உலகத்தின் நாகரிகநிலை முதிர்ச்சிக்குத் தக்கவாறு பாஷையும் ஒத்தியங்கித் திருந்தி முதிர்ச்சி யடைதல் வேண்டும். அங்ஙனம் முதிரும் பாஷையே செழிப்புள்ள பாஷையாம். அதன் கண்ணேயே எக்கருத்துக்குந் தக்கசொல் அகப்படும். மேற்கூறியவாறு திருந்தி முதிராத பாஷை [1]‘பிராணதாரணப் பிரயத்தன’த்தில் நிலைத்து நில்லாது காலக்கிரமத்தில் அழிந்துபடும்.

தமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக்கவாறு அமையவில்லை. நாகரிக வளர்ச்சியின் விரைவினும் தமிழ்மொழியின் வளர்ச்சி விரைவு குறைவுபடுதலாலே இவ் விரண்டிற்கு முள்ள தூரம் மிகுந்து கொண்டே போகின்றது. இத்தூரம் இனிமேலும் மிகவொட்டாது தடுத்தல் வேண்டும். இதுகாறும் ஏற்பட்டுள்ள தூரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்தலும் வேண்டும். இவை செய்யாக்கால் தமிழ்மொழி அருகி அஃகுவதாகும். தம் தாய்மொழியாகிய தமிழ் அத்தன்மையான நிலைமையை யடையாது அதனைப் போற்றுதல் தமிழ் வாணராயினார் யாவர்க்கும் உற்ற கடப்பாடன்றோ?

மன்பதையின் ஆக்கப் பொருளாகிய பாஷையின் கண்ணே, தனித்தனி மக்கள் கருத்துக்களின் போக்குக் கியைத்தபடியெல்லாம் சொற்கள் அகப்படுமென்றெதிர் பார்த்தல் செவ்விதன்று. அவரவர் கஷ்டப்பட்டுச் சொற்கள்


  1. Struggle for existence