பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

படைத்தல் வேண்டும். அவை மற்றையோர் சுவைக்கும் ஏற்றன வாய்க் காணப்படின் உடனே மேற்கொள்ளப்பட்டுப் பாஷையிலே வழங்குவன வாகும் அல்லாக்கால் அவைதாமே வீழ்ந்துபடும். ஒருமுறை ஒருகருத்து வெளிப்பட்டு விட்டதாயின், அப்புறம் கஷ்டமில்லை. முன்னரேயுள்ள சொற்களை, உருவத்திற் சிறிதளவு திரித்தாதல் சிறிதளவு குறைத்தாதல் புத்துருவம் படைத்தாதல் மாற்றித் தங்கருத்துகளை நாகரிகநிலை முதிர்ந்த மக்கள் வெளிப்படுத்தியே விடுவார்கள்.

தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ, தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.

ஆதலின் தமிழ்மொழி யிவ்வாறு பிரிந்து பிரிந்து வழிமொழிகட்கு இடஞ் செய்துகொண்டு ஒரு நிலைப்பாடெய்திப் பயிற்சிகுன்றி, ஆரியம்போற் பரவை வழக்கு அழிந்தொழிந்து போதல் விரும்பாத தமிழ்மக்கள் தமது அருமையான பாஷையை வேண்டியவளவு சீர்திருத்திக்கொள்ள இன்னே புகுதல் வேண்டும். இன்னுங் காலந்தாழ்க்கலாகாது.

அப்படியானால் தமிழ்மொழி யுடனே மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் யாவை? பண்டிதராயினார் திரிசொற்கள் பலவழங்கியும், அருகிய சொல்லுருவங்களை யுபயோகித்தும், செய்யுட்களிலும் அருகிவரும் அளபெடைகளைத் தொடுத்தும், விரிக்கவேண்டிய வேற்றுமை யுருபுகளைத் தொகுத்தும், சாமானிய ஜனங்கள் மருண்டு ஒதுங்கிச் செல்லத்தக்கவாறு எழுதும் வழக்கத்தை நிறுத்திவிடல் வேண்டும்.

ஒருவரும் ஒன்றை யெழுதி அதனைத் தாமே படிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளமாட்டார். எழுதுவோரும் படிப்போரும் ஒருவரா யிருத்தலரிது. ஆதலின் ஒருவர் ஒன்றெழுதினால் அதனைப் பிறரெல்லாம் படித்தறிந்து கொள்ளவேண்டு மென்ற நோக்கத்தோடே எழுதுகின்றா ராதல் வேண்டும். அந்நோக்கமே அவர்க்குப் புகழும் பொருளும் தரவல்லது. ஆகவே பிறரெல்லாம் படித்துணர்ந்து கொள்ளத்தக்க தெளிவான நடையிலெழுதுவதே யாவரும் மேற்கொள்ளத் தக்கது. அத்தன்மையான தெளிவு நடைக்குத் திரி சொற்கள் வேண்டாம்; இயற் சொற்களே போதும். தப்பித்தவறி யிரண்டொன்று வழங்கி விட்டாலும் பாதகமில்லை. இதுபோலவே பூர்வாசிரியர்களுடைய நூல்களிற் காணப்பட்டு இக்காலத்தில் அருகிப்போன சொல்லு