பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

249

ருவங்களைக் கிளப்பிக் கொணர்ந்து வழங்குதலும் நேரிதன்று. இவற்றாற் பொருள் மயக்கம் உண்டாகின்றதேயன்றி வேறில்லை. பிறரை மயங்க வைக்க வேண்டுமென்பது ஒருவருக்கும் நோக்கமா யிருக்கலாகாது. அது நோக்கமாயிருந்தாற் பொருளில் தெளிவு எப்படி யேற்படும்? ஏற்படவே படாது. உதாரணமாக, ‘அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் போனான்’ என்ற வாக்கியத்தை, ‘அன்னோன் ஈண்டை இறுத் திருக்குபு பிற்றை ஞான்றை யேகினன்’ என்றெழுதினாற் சாமானிய ஜனங்கள் அறிந்து கொள்ளுவார்களா? ஒருநாளும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஒருவேளை செய்யுளெழுதுவதா யிருந்தால் யாப்பு நேர்மைகருதி இரண்டோர் அருகிய சொல்லுருவங்களை வழங்கினாலும் அஃது இழுக்கில்லை.

இவைபோலவேயாம் வீணாக அளபெடைகளை வழங்குதலும். அளபெடைகள் யாப்பு நேர்மைக்காகவே வகுக்கப்பட்டன. வசன நடையில் யாப்பு நேர்மையேது? இல்லை. ஆனால் பண்டிதரெழுதும் வசனநடை செய்யுணடையை யொட்டியே நடத்தலால் அவர் ஓசை யின்பங் கருதி வழங்குவாராயினர். இவ்வளபெடை வழக்கும் நீங்க வேண்டும், பொருளின் தெளிவு கருதினால்.

இவ்வாறே, வேற்றுமை யுருபுகளும் பிறவும் வாக்கியங்களில் விரிந்திரா விட்டால், அவ்வாக்கியங்கள் நெருங்கிச் செறிந்து கருதிய பொருளை ஆழ்த்தி விடுகின்றது. இத்தன்மையான நூல்களைப் படித்துப் பொருள் காண வந்தவர், அவற்றின் கண்ணே நுழைந்து மூழ்கிப் பொருள் காண்பரென்பதென்ன நிச்சயம்? சாதாரணமாகச் சனங்கள் மேலேமுதல் நோக்கத்திலேயே பொருள் தெரியா விட்டால் அதற்காகக் கஷ்டப்படுகிறதில்லை.

ஆதலால், யாம் மேற்கூறியவாறு, காலத்தினருமை கருதியும், யாவருக்கும் பொருள் விளங்கவேண்டு மென்பது கருதியும் தமிழ்ப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும், நாவலர்களும் முதலிய யாவரும், தெளிவான தமிழ் நடையைக் கைப்பற்றி, அந்நடையிலேயே நூல்கள் எழுதுவார்களாக. பண்டிதர்கள் தமது நடைத் தெளிவானாற் பெரிதும் சாமானிய சனங்களைத் திருத்தி நல்வழிப்படுத்தலாம். சாமானிய சனங்களும் அதிக கஷ்டமில்லாமல் எளிதில் திருந்துவர். இருவர்க்கும் உள்ள வொற்றுமை யேற்படும். இருவரும் ஒத்தியங்குவர். பண்டிதர் நூல்கள் சாமானிய மக்களால் ஆதரிக்கப்படும். அவ்வாறு ஆதரிக்கப்படுமேற் பண்டிதர்கட்கு குறைவேயில்லை.

இவ்விஷயத்தில் ஆங்கிலவாணரைப் பார்த்து நாம் பொறாமைப் படுதல் வேண்டும்.

-தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெலாம்
எற்றே யிவர்க்குநா மென்று”

என்றபடி ஆங்கில நூல்வாணரைப் பார்த்தாவது தமிழ் வாணரும் சாமானிய