பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

சனங்களை யொட்டிச் சென்று அவர்களைக் கைவிடாது பற்றிக்கொண்டு திருத்தி, அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்வார்களாக.

“தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”

என்ற திருவள்ளுவனார் வாக்கு ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று.

இனித் தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக் காணோம் இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களிற் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறுபாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விடத்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான். எளிய சந்திகளைச் சேர்ப்பதனாற் சாமானிய சனங்களுக்குப் படிப்பதிற் கஷ்டப்பட வேண்டியதொன்றுமில்லை. நன்று, இவ்விதிகளெல்லாம் வசனநடையில் அநுசரிக்கத் தருவனவாகும்; மற்றுந் தமிழ்ச் செய்யுணடையிலும் இவை தழுவத் தக்கனவோ? இது சிறிது வாதம் விளைக்கத் தக்கதோர் விஷயம். செய்யுளின்கண் இவை மேற்கொள்ளப்படுமேல், செய்யுளை ஓசையூட்டி இசையறுத்துப் படிக்கும்போது இடர்ப்பாடு காணப்படும். ஆதலால் சந்திசேர்த்து இசை நலங்கெடாமல் ஒரு பாடந்தந்த பின்னர் சந்திபிரித்துப் பிறிதொரு பாடம் அதனடியில் தருதல் வேண்டும்.

ஆகவே சந்திபிரித் தெழுதும் விஷயத்தில் எவ்வளவு மட்டில் இடர்ப் பாடின்றி மேற் கொள்ளலாமோ அவ்வளவையும் மேற்கொள்ளவே வேண்டும். இதன் கண்ணே தமிழ்வாணர் காலம் போக்கற்க.

இனி ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசன முள்ளதாகக் காணப்படுகின்ற ‘குறியீட்டி லக்கணம்’ தமிழின் கண் முழுவதுந் தழுவிக்கொள்ளப்படல் வேண்டும். அதனாற் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியும் உண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின் கண் ஆர்வமுண்டாகின்றது. இக்குறியீட் டிலக்கணமெல்லாந் தமிழ் வசனநடை கைவந்த வல்லாளராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களானே முன்னே மேற்கொண்டு வழங்கப்பட்டுள. இதனை வசன நடையின்கண் ஆக்ஷேபிப்பா ரெவருமில்லை. செய்யுணடையிலேதான் உள்ள வம்பெல்லாம். இதனைச் செய்யுணடையில் ஒருவாறு மேற்கொள்ளலா மென்று துணிந்து புகுந்தாலும், குற்றியலுகரம்போல்வன வருமிடத்து இடர்ப்பாடு காண வேண்டியதாகின்றது. அதனையும் ஒருவகைத் தலைக்குறியாற் கனம்பொருந்திய ஜி.யூ. போப்