பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

251

பையர் அவர்களும், உடுக்குறியாற் காலஞ்சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும் விலக்கிக் கொண்டனர்.

இனி, உள்ளவாறே உற்றுநோக்குமிடத்துக் குறியீட் டிலக்கணத்தைப் பற்றி ஆக்ஷேபித்தற்குத் தக்க நியாயங்களுமில்லை. ஆக்ஷேபிக்கு மியல்புடையாரும் ஆக்ஷேபிக்க வில்லை. ஆதலின் அது விரைவில் மேற்கொள்ளப்பட்டு முற்றிலும் பயிலப்படும் என்பதிற் சந்தேகமில்லை. அதனால் தமிழிற்கு விசேஷ நன்மைகள் விளையுமென்பதிலுந் தடையில்லை.

தமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர்.

“அரைசருங் குடிகளு மம்ம வேறலர்
உரைசெயி னுயிருலா முடல மாவரால்”

என்று யாம் பிறிதோரிடத்திற் கூறியாங்கு இருவரும் ஒத்தே இயங்குதல் வேண்டும். இவ்வாறு இருவரும் ஒத்தியங்கு மிடத்துத் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலபாஷையிற் புகுதலும், ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப்பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதனைத் தடுக்கமுடியாது; தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமேயன்றி வேறில்லை. ஏறக்குறைய ஆங்கில அரசாட்சி வந்து ஐம்பதறுபது வருஷமாகிறதற்குட் கணக்கற்ற ஆங்கிலச் சொற்கள் பரவைவழக்குத் தமிழிலே புகுந்துவிட்டன. கிராமவாசிகளும் பிறர் தம்மை நாகரிகமக்களாகக் கருதல்வேண்டி ஆங்கிலச் சொற்களைத் தம் பேச்சிலே ஆவலோடு வழங்குகின்றனர். இவ்வாறு பேச்சுத் தமிழ் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத்தமிழ் அவற்றை ஏற்றுக்கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிகைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின் கண் ஏற்றப் புகுந்தன. ‘மதுரைப் புதுத்தமிழ்ச் சங்க’த்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமையாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே.

ஆங்கில வாணர் சகல சாஸ்திரங்களிலும் வல்லுநராய், யாங்குச் சென்ற போதிலும் ஆங்குள்ள அரிய விஷயங்களை மதித்து மேற்கொள்வதனொடு நில்லாமல், ஆங்குள்ளார் பயிலும் பாஷைச் சொற்களையும் மேற்கொள்கின்றனர். ஆதலானன்றே அவர்கள் லௌகிகஞானம் விரிந்து, வாழ்க்கை நியமங்களை நன்குணர்ந்து, ஊக்கங் குன்றாது பல நாடுகளை வென்று நாகரிக நிலையில் யாவரினும் மிகவும் உயர்ந்தோரென மதிக்கப்படுகின்றனர்.

ஆங்கிலரைப்போலத் தமிழ் மக்களும் நாகரிக நிலையில் உயரவேண்டின் ஆங்கிலம் கற்று அவர்களது சாஸ்திர ரகசியங்களை அறிந்துகொள்ளவேண்டும். அங்ஙனங் கற்றுக்கொண்டோரிற் சிலர் அவ்வரிய உண்மைகளைத் தம்முடைய தாய்மொழியாகிய தமிழ் மொழியில் வெளியிடுதற்குரிய ஆற்றலிலராய்த் தம்மவர்க்குப் பயன்படாது வாணாள் வீணாள் கழிக்கினறனர். இப்பொழுதுதான்