பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

சிலர் தமிழ் மொழியைக் கண்விழித்துப் பார்ப்பாராயினர். அநேகர் ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கப் புகுந்தனர். இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையால் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும்நலமே. இம் மொழிபெயர்ப்புவகை ஒன்று போதாது; இன்னும் வேறுவகைகளும் வேண்டும். தமிழ்ப் பகுதிகளினின்று புதுச்சொற்கள் படைத்துக் கருத்தை வெளிப் படுத்தலாம். உள்ள சொற்களைத் திரித்தும் சில புதுக்கருத்திற்கு இடஞ்செய்யலாம். சிலர் ஆங்கிலக் கருத்துகளுக்கு ஏற்றசொற்கள் தமிழ் மொழியிற்காண்டல் அரிதாயின் வடசொற்களின் மூலமாக அவற்றைத் தமிழில் வெளியிடுகின்றனர். இவ்வளவு தூரஞ் சுற்றுவானேன்? தலை சுற்றித்தான் மூக்கைத் தொடல் வேண்டுமோ? நேரே மூக்கைத் தொடல்கூடாதோ? ஆங்கிலச் சொற்களையும் ‘திசைச் சொற்’களாக மேற்கொண்டாலென்னை? மேற்கும் ஒரு திசையன்றோ?

“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.”

என்ற சூத்திர விதியின்கண் ஆங்கிலநாடு அடங்கவில்லையே யென்று வாதித்தலும் ஒக்குமோ? ஆங்கிலமொழி திசைச்சொற்குரிய நிலங்களிலும் வடசொற்குரிய நிலங்களினும் பயிலப்படுவதேயன்றிச் செந்தமிழ்க்குரிய நிலத்தினும் பயிலப்பட்டு வருதலால், ஆங்கிலச் சொற்களைத் திசைச்சொற்களென மேற்கொள்ளுவதிலே யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம். இதனைப் பேரறிவாளராயினர் பிற பரவை வழக்குள்ள பாஷைகளின் சரித்திரங்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் செவ்வனே யாராய்ந்து உண்மை யெனக் கண்டு காலந் தாழ்த்தலின்றி யுடனே மேற்கொண்டு தமிழ்ப் பாஷை முதிர்ந்து நாகரிக நிலையிலுயர்ந்து முன்னுக்கு வருமாறு செய்வாராக.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.”

என்ற பவணந்திமுனிவர் கூற்று அறிவுடையோர் அனைவருஞ் சிந்திக்கற் பாலது. இவ்வளவு சுவாதீனமுள்ள தமிழ்ப் பாஷைக்கு மேற்கூறியாங்கு செய்வதற்குத் தடையென்ன? ஒருதடையுமில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலுமாகிய இவ்விரண்டும் பாஷை யியக்கத்திற்குரிய இரண்டு கால்களென மதிக்கப்படுகின்றன. இவ்வுண்மையை யுய்த்துணர்ந்து தமிழ்ப் பாஷையின்கட் செய்யவேண்டிய சீர்திருத்தங்களையுடனே மேற்கொள்ளுதல் தமிழ் மக்கள் கடனாம்.

பாஷையின் சீர்திருத்தம் முற்றிற்று.