பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
X. முடிவுரை.
 

 

துகாறும் ஒன்பது உபந்நியாஸங்களிலும் யாங் கூறி வந்த விஷயங்களைத் தவிர்த்து அவ் வுபந்நியாசத் தலைப் பெயர்களொடு பொருந்தாது, எஞ்சிய சில விஷயங்களைப்பற்றி இவ் வுபந்நியாசத்திற் கூறித் தமிழ்மொழியின் வரலாற்றிற்கும் ஓராற்றான் முடிவுரை கூறுவாம்.

யாங் கூறும் இம்முடிவரை ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற விந்நூலிற்கே யன்றித் தமிழ்மொழியின் வரலாற்றிகன்றெனவுணர்க. தமிழ் மொழி வளர்ந்து முதிர்ந்துகொண்டே செல்லும் பாஷையாம். ஆதலால் இந்நூலும் முடிந்த நூலன்றென்பது தேற்றம். இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கேற்ப வளரவேண்டுவது.

இக்காலத்தில் ஆங்கில பாஷைகற்ற தமிழ்மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்கவேண்டுவது ஆவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றன வென்றும் பலதிறப்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ்கற்கவேண்டிய தவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமும மற்றவர் கூற்றாம். இவ்விரண்டும் மிக்க ஆங்கிலர் இவ்விரண்டும் அற்றவர்களை எவ்வாறு மதிப்பாரோ? ஆங்கிலம் முதலிய பிறபாஷைக்குரியராய் அப்பாஷைகள் வல்லுநரெல்லாம் தமிழ்மொழியின்மீ தார்வமுடையாரைய்த் தமிழைக் கற்றும் தமிழ்நூல்களைத் தங்கள் பாஷைகளில் மொழிபெயர்த்துக் கொள்ளுதலை உற்று நோக்கி யாதல் தமிழ்க் கல்வி அவசியமன்று என்பார்க்குப் புத்திவரட்டும்.

பாஷையறிவு பிறிதொரு பயனுக்குக் கருவியாகுமே யன்றி, அதுதானே பயனாகாது. பாஷையறிவே பயனெனக் கருதி அதன்கண் இன்பங் காண்பாருமுளர். சபைகளிலாவது சம்பாஷணைகளிலாவது சாதுரியமாகப் பேசுவோர் பாஷையறிவுடையரே யன்றிச் சாஸ்திரக் கல்வியுடையாரல்லர். சாஸ்திரக் கல்வியுடையார் எங்கே போனாலுந் தங்கள் கடையை விரிக்கப் புகுவாரேயன்றி வேறன்று. சாஸ்திரக் கல்வியுடையார்க்குப் பாஷையறிவும் இன்றியமையாததே. தங்கள் கருத்துக்களால் உலகமனைத்திலும் இன்பவுணர்ச்சி யெழுப்ப வல்ல நல்லிசைப் புலவர்கள் செய்த பாமுறைகளைப் படித்தலாலுண்டாகும் பயன் அளவிடற் பாலதன்று; மக்களிடத்தி்ல் அடங்கிக் கிடக்கும் மநோ விகாரங்களை எழுப்பிச் சுவை பயக்கும்.

இனி யிது நிற்க. தமிழ்நாட்டில் ஆங்கில வரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன்வழி மொழிகளாகிய தெலுங்கு கன்னட மலையாளதுளுவங்களோடு அடக்கி ‘உண்ணாட்டுமொழிகள்’ என வகைப்படுத்தனர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப் படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? ஆரியமொழி