பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

களுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமைபோலத் தமிழ் மொழியையும் அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம். இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவு படுத்தி வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்கவேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்துவிட்டனர் தமிழ்மொழியாளர்.

வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ்மொழியும் ‘உயர்தனிச் செம்மொழி’ யாமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பன்மொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்கவே தகவுடைமையுமுள்ள மொழியே ‘உயர்மொழி’. இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்து தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கும் நாட்டிற்பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே ‘தனிமொழி’ எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியி னுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிது மிடற்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய நூற்புலவர்கள் பலர்க்கும் ஓப்பமுடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது?

திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் ‘செம்மொழி’யாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன் முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதி னுணரவல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்க ளேற்படுமிடத்துப் பிறபாஷைச் சொற்களன்றித் தன்சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ்மொழிக்குப் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி யென்பது திண்ணம். இது பற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ்மொழி ‘செந்தமிழ்’ என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் ‘உயர்தனிச் செம்மொழி’யேயாம் என்பது நிச்சயம். இவ்வள வுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்