பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

255

மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர் தனிச்செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத், தென்னாட்டுயர் தனிச்செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்.

பல்லாண்டுகளின் முன்னர்ச் சென்னைமா நகரிலே, ஆங்கில வரசாட்சியின் பயனாக, ‘பள்ளிக்கூடப்பாட நூற்சபை’ என்ப தொன் றேற்பட்டுப் பல நற்றொழில்கள் செய்து வாராநின்றது. இச்சபையார் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கேற்ற பாடநூல்கள் அமைத்தனர்; அவ்வளவில் நில்லாது அவர்கள் சமஸ்கிருத நாடகக் கதைகளையும் ஆங்கில நாடகக் கதைகளையும் தெளிவான தமிழ் வசன நடையிலெழுதி வெளியிட்டனர்; ‘ஜந விநோதிநி’ என்றதோர் அருமையான தமிழ்ப் பத்திரிகையை மாதந்தோறும் பிரசுரித்து ஏறக்குறைய இருபத்திரண்டு வருஷகாலம் நடாத்தினர். யாது காரணத்தினாலோ அதுநின்றுபட்டது? அப்பத்திரிகை நின்று பட்டமை தமிழர்களது துரதிர்ஷ்டமேயென்னலாம். மேற்கூறியவாறு நற்றொழில் புரிந்து வந்த அச்சபையானது இப்போது சில்லாண்டுகளாக இருக்குமிடந் தெரியாதவாறு தூங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் உயிருடனிருக்கின்றதென வெண்ணுவதற்கு இடனுண்டு. ஏனெனில், இச்சபையார் சிற்சில சமயங்களில் தமிழின்கண் வெளிப்படும் நல்ல நூல்கள் சிலவற்றிற்கு நேர்ந்த பதிப்புச் செலவுகருதி அவ்வந் நூலாசிரியர்கட்குப் பொருளுதவி செய்கின்றனர். இச்சபை மீட்டுந் தலைக்கிளம்பி முன்போல ஊக்கமுற்றுப் பல நற்றொழில்கள் புரியினும் புரியலாம். இது துயிலொழிந் தெழுக.

இவ்வாறு பள்ளிக்கூடப் பாடநூற் சபை துயில்வது கண்டு நன்மக்கள் சிலர் முற்புகுந்து, தமிழ் தெலுங்கு மலையாள கன்னட துளுவங்களாகிய அனைத்தையும் போற்றுவேமென எழுந்து ‘திராவிட பாஷா சங்கம்’ என்னும் பெயர் புனைந்து கொண்டு சின்னாள் உழைத்தனர். இவர்கள் சில ஆங்கில சாஸ்திரச் சொற்களை மேற்கூறிய பாஷைகளில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டனர். அதன்மேல் துயிற்பெருந் தேவி இச்சங்கத்தையும் பற்றிக் கொண்டனள். ஆகவே சென்னை திராவிட பாஷா சங்கமும் தூங்குவதாயிற்று. இஃது என்று எழுமோ? அறியேம். இதுவும் விரைவினெழுக.

இனிச் சரித்திர சம்பந்தமாகவும் புராண சம்பந்தமாகவும் தமிழ் மொழியின் சம்பந்தமாகவும் மிகப்பேர்படைத் தொளிரும் மதுரைமா நகரின் கண்ணே புதிதாகத் ‘தமிழ்ச் சங்கம்’ ஒன்று தாபிக்கப்பட்டு நடந்து வருகின்றது. அதற்கு அங்கமாகப் ‘பாண்டியன் புத்தகசாலை’யும் ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’யும் ஏற்படுத்தப் பட்டுன. முன்னதன்கட்பல அருமையான ஏட்டுப் பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்றுபார்க்கும்படி வைக்கப்பட்டுள; அச்சான நூல்களுள்ளும் அநேக மிருக்கின்றன. பின்னதன் கட் கல்வி பயிலும் மாணாக்கர் பலர், நூல்களும் ஆடையு முணவும்