பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

சங்கத்தாருதவ, அவற்றைப் பெற்றுப் படிக்கின்றனர். இச்சங்கத்திற்கு அவயவிகளாக ஏறக்குறைய ஐம்பதின்மர் புலவர் இருக்கின்றனர். இவர்களெல்லாம் வருஷம் ஒருமுறை கூடுகின்றனர்; கூடித் தமிழ்மொழி முன்னுக்கு வருதற்குரிய யோசனைகள் செய்கின்றனர். சங்கத்திற்கெனத் தனியே ஓர் அச்சியந்திர சாலை ஏற்படுத்தப்பட்டுளது. அதன் மூலமாகப் பல அரிய தமிழ் நூல்களைச் சங்கத்தார் அச்சிடப் போகின்றனர். ‘செந்தமிழ்’ என்னுந் தலைப்பெயரிட்டு ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை நடாத்தி வருகின்றனர். அதன் கண்ணே பல அருமையான விஷயங்கள் வெளிப்படுகின்றன. சங்கத்தார் ஆங்கிலக் கலாசாலைகளிற் கற்கும் மாணாக்கர்க்குத் தமிழில் ஆர்வமுண்டாதல் வேண்டிப் பணப்பரிசிலும் யோக்கியதா பத்திரமும் வைத்துப் பரீட்சைகளேற்படுத்தி யிருக்கின்றனர். இவ்வாறு நல் வழிகளில் உழைத்து வரும் இம்மதுரைத் தமிழ்ச்சங்கம் நீடூழி நின்று உலவுவதாக.

ஆங்கிலக் கலாசாலைகளையொட்டி ஆங்காங்குத் தமிழ்ச் சங்கங்கள் பல தாபிக்கப் பட்டு நடைபெறுகின்றன. உதாரணமாகச் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையைச் சார்ந்து ‘திராவிட பாஷாபி வர்த்தநி சங்கம்’ என்பதும் சென்னை இராசதானிக் கலாசாலையைச்சார்ந்து ‘தமிழ்ச்சங்கம்’ என்பதும் நடைபெறுகின்றன. எனவே ஆங்கில வரசாட்சி தமிழ்மொழியின் முதிர்ச்சிக்குப் பல்லாற்றானும் உதவிசெய்து வருகின்றதென்பது யாவருமுணர்ந்த விஷயம்; மேற்கூறியவாறு பல சங்கங்கள் சேர்வதற்குக் கைகொடுத்தும் கடைக் கணித்தும் பரீக்ஷைப் பாட நூல்களுள் தமிழ் நூல்கள் பலவற்றை யேற்படுத்தியும் ஆங்கிலர் தமிழைப் போற்றுகின்றனர். அச்சியந்திரம் முதலியன அவர் கண்டுபிடித்துத் தந்துதவினர்; தமிழரது நாகரீக விருத்திக்குந் தனிப்பெருங் கருவியாய் இருக்கின்றனர்; கையெழுத்து நூற்சாலையும் அமைத்திருக்கின்றனர். இவர்களது அரசு நீடூழி நிலைத்துத் தமிழ்மொழியை மேன்மேலும் வளர்ப்பதாக.

பாஷை திரிந்து வேறுபடுவதெல்லாம் தன்னியல்பாகவேயாம். ஒருவனாலுந் தான் விரும்பியபடி, தான்பேசும் பாஷையை மாற்றமுடியாது. மக்களறிவின்றியே பாஷை முதிர்ந்துகொண்டு செல்லும்; பல்லாண்டுகள் கழிந்த பின்னரே முதிர்ச்சிக் குறிகள் தோன்றும். பாஷையினியல்பு இவ்வாறாக, இதனை யறியப் பெறாத வைத்தியநாத தேசிகர் நன்னூலாரது உட்கருத்தையும் உணராது,

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”

என்ற நன்னூற் சூத்திர விதியைப்,

“பழையன கழித்தலும் புதியன புகுத்தலும்
வழுவல கால வகையினானே”

என்று மாற்றித் தமது ‘இலக்கண விளக்கம்’ என்ற நூலின்கட் கூறினர்;