பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாரதியார்

முன்னுளில் ஒருபுலவர் கடவுள் பேரில்
முழநீளம் பாட்டெழுதிக் காம எண்ணம்
தன்னையங்குப் பொழிந்திருப்பார் மீண்டும் அந்தத்
தனிக்கடவுள் தனைநோக்கி ஒருவர் சொல்வார்
என்னேஇவ் வாழ்க்கைபெரும் மாய மென்றே
இன்னொருவர் கடவுள்களின் லீலை யெல்லாம்
தன்னேரில் லாதசெந் தமிழிற் பாடித்
தாம்பெரிய புலவரெனத் தருக்கிக் கொள்வார் !

ஒருநாட்டின் நாகரிக வளர்ச்சி தன்னை
உணர்த்துகின்ற கண்ணாடி இலக்கி யந்தான்
பெரும்புலவர் பலருமிதை மறந்தார். ஈசன்
பெருமைகளைப் பாடுவதே தொழிலாய்க் கொண்டார்.
 
அரும்புலவன் பாரதிதான் பிறந்த நாட்டின்
அவலநிலை சித்திரித்தான் இடித்துக் காட்டித்
"திருநாடே விழித்திடுக" எனும்பு ரட்சித்
தேன்மொழியைச் செவிகுளிரப் பாய்ச்சி விட்டான்.

உழக்குக்குள் கிழக்கென்ற வாறே யிங்கே
ஊரெல்லாம் வெள்ளையருக் கடிமை யான
இழுக்கிருக்கும் போதுயர்ந்த சாதி என்னும்
இறுமாப்பும் நிலைத்ததுவே சிலரி டத்தில்.
முழக்கினார் "இழிசாதி மக்கள் எங்கும்
முன்வரக்கூ டாதென்றே!" எதிர்மு ழக்கம்
முழக்கினான் பாரதிதான் 'இந்த நாட்டின்
முடிமன்னர் யாவருங்காண்' என்று ரைத்தே !