பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

125

விடையாகக் குப்புச்சாமி முதலியாரால் எழுதப் பெற்றதாகும். அதில் அவர், தன்னை உயர்த்தியும், அடிகளாரைத் தாழ்த்தியும் சில எழுதியிருந்தார். "கைதவமறியாச் செய்தவமுடையயோய் ! நினாது கடிதங்கண்டாம்." எனத்தொடங்கியிருந்தார். இச்செயல் அங்கிருந்தோ ரனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மீண்டும் சித்தாந்தம் :

1927-ஆம் ஆண்டில் சுவாமிகள் முதல் முறையாகச் சென்னைக்கு எழுந்தருளினார்கள். இப்போது பிராட்வே டாக்கீசு என்னும் இடம் அப்போது பாலசு தியேட்டர் என்ற பெயருடன் வழங்கிவந்தது. அங்கு சமாசத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று 1927 சூலையில் அடிகளார் தலைமையில் நடந்தது. அது ஒரு மாநாடு போலவே நடந்தது. அக்காலை நீதிபதி சர். வே. பா. இராமேசம், பா. வே. மாணிக்க நாயக்கர், திரு. வி. கலியாண சுந்தர முதலியார் முதலாய பேரறிஞர் சொற்பொழிவாற்றினர்.

அக்கூட்டத்தில் சித்தாந்தம் இதழை மீண்டும் நடத்துவதென முடிவு செய்யப்பெற்றது. அடிகளாரே அவ்வாறு முடிவு செய்யக் காரணர்களாயிருந்தார்கள். தொடங்கும் முதல் இதழுக்காம் பொருட் செலவினைத் தாமே அளிப்பதாக உறுதிகூறி, அவ்வாறே பொருளும் அளித்தனர். அடுத்த 1928-ஆம் ஆண்டு சனவரியில் சித்தாந்தம் தொடங்கப் பெற்றது. அடிகளாரின் அருளாசியும், பொருளாசியும், கைவண்ணமும் இன்றளவும் அவ்விதழ் தொடர்ந்து நடைபெறக் காரணமாயின. வாழ்க அவர்களது கைவண்ணம் !

அக்கூட்டத்தினிறுதியில் நீதிபதி இராமேசம் அவர்கள் அடிகளாரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்கள். அதன் பின் பற்பலர் அழைப்பிற்கிணங்கிப் பல இடங்களில் அருளுரையாற்றி அன்பர் மனங்களில் நீங்கா இடம் பெற்றுப் பிரியா விடை கொண்டு புலிசை மீளத் தொடங்கினார்கள். சென்னை அன்பர்கள் தம் நன்றியறிதலை அறிவிக்குமுகத்தான். கோகலே மண்டபத்தில் ஒர் பொதுக்கூட்டம் கூட்டினர். நகர மக்கள் சார்பில் சர். A. இராமசாமி முதலியார் சுவாமிகளின் அரிய தொண்டுகளைப் பாராட்டி ஆங்கிலத்தில் xஓர் சொற் பொழிவாற்றினர். பிரிவு உபசாரப் பத்திரம் ஒன்றும் வாசித் தளிக்கப்பெற்றது.