பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

153

படிப்பார்கள். அதன் பின் அன்வயப்படுத்திப் படிப்பார்கள். பிறகு அதன் பயனிலையை முதலிற் கூறி, செயப்படு பொருள்கூறி, பின் அடைமொழிகளை இணைத்துக் கூறி அம்முறையே எழுவாயைக் கூறிய பின்னரும் யாவற்றையும் ஒருமுறை கூறியபின்னரே, பதப் பொருள், மொழிப்புரை கூறுவார்கள். ஒருகுறி கேட்போன், இருகால் கேட்கவேண்டு மென்ற எண்ணமே எழாதவராகிவிடுவார். பின்னும் கேட்போரை அப்பாடலைப் படிக்கச் செய்வர். அவரும் பதம் பிரித்தும் கூடியவரை கொண்டு கூட்டியும் படிக்க வேண்டும். அங்ஙனம் படிக்காதவரை அங்ஙனம் படிக்கச் செய்வார்கள். அதன் பின்னரே அடுத்த பாட்டிற்குச் செல்வர், இங்ஙனம், சிறிதும் சோர்வின்றிப் பாடம் நடத்துவார் யாரேனும் உளரோ?

'அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருள்கள் மிதந்து சுழல, அன்புவெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து,அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கி லெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன்தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலெழும் மின்விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது.' திரு.வி.க.

தமிழ்ப் பற்று : இந் நிலவுலகில் நம் அடிகளார் எழுந்தருளி யிருந்தகாலம் அந்நிய ஆட்சி நடைபெற்ற காலம், அன்று, தமிழர் மட்டுமே யன்றித் தெலுங்கர், மலையாளிகள் ஆகிய மொழியினரும் அலுவலங்களில் பணியாற்றியவர்கள், தெலுங்கோ, மலையாளமோ பேசும் இருவர் ஒருவரோடொருவர் (இன்னின்னாரென அறிந்தபின்) பேசிக் கொள்ளுங்கால் அம்மொழியிலேயே பேசுவதும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இருவர் அங்ஙனம் பேச நேருங்கால் அயல் மொழியாம் ஆங்கிலத்திலே பேசிக்கொள்வதும் எதனால்? தம் தாய் மொழி யினிடத்தும் பற்றின்மையாலா? புறக்கணிப்பாலா என்று வினவி அத்தகையோர் திருந்தும் வண்ணம் சொற்பெருக்கினிடையே குறிப்பிடுவார்கள்.

காலந் தவிராமை : சுவாமிகள், காலத்தின் அருமையினை நன்கு உணர்ந்தவர்கள். தம் நித்திய நியமங்கள் எல்லாம்