பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வல்லிக்கண்ணன்

காலம் தவிராமற் செய்வார்கள். பிறரும் அவ்வாறே நடந்து கொள்ளுமாறு தூண்டுவார்கள். சொற்பொழிவு, இன்ன நேரத்தில் துவக்கப்பெறு மென நிகழ்ச்சியில் அச்சிடப் பெற்றுவிட்டால், அந்த நேரத்திற்கு முன்னதாகவே சுவாமிகள் அங்கெழுந்தருளி விடுவார்கள்.

1934- ஆம் ஆண்டில் திருவண்ணாமலை சக்தி விலாச சபையில், அண்ணாமலையானின் பெருவிழா நாட்களிற் சொற்பொழிவுகள் சுவாமிகள் தலைமையில் நடந்தன. அச்சிடப் பெற்ற நிகழ்ச்சி நிரலில், பகல் 1.30மணிக்கு எனக் காணப்பெற்றது. சுவாமிகள், 1.25க் கெல்லாம் அங்கிருக்குமாறு புறப்பட்டு எழுந்தருளி விட்டார்கள். மக்கள் கூட்டம் இல்லா திருந்தமை கண்டு, திருமுறைகளை ஓதக் கட்டளையிட்டருளினார்கள். அங்ஙனமே ஒருமணி நேர அளவு திருமுறை ஓதப்பெற்றது. அன்று ஒலிபெருக்கி நம் நாட்டிற் பரவவில்லை. பின்னர் சுவாமிகள் எழுந்தருளியமை கண்டும் கேட்டும் கூட்டம் சேர்ந்தது. தலைமையுரை முதலாம் நிகழ்ச்சிகள் தொடங்கப் பெற்றன. சொற்பொழிவாளர்களும் பின்னரே வந்தனர். சுவாமிகளின் அன்றாட நடைமுறை, காலத்தில் நிகழ்வது. சித்தாந்தம் இதழில் ஞானியாரடிகளுடன் மூன்று மாதங்கள் என்ற கட்டுரையில் ஆ. சிவலிங்கனார் தெளிவாக எழுதியுள்ளார்.

ஞாயிறுகளிலும், கிருத்திகை, கந்தர்சஷ்டி முதலாகிய நாட்களிலும் மடாலயத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். சிறப்பானவர்கள் எவரேனும் மடாலயத்திற்கு வந்து, சுவாமிகளிடம் அளவளாவிக் கொண்டிருந்தார்களேயாயினும், குறிப்பிட்ட நேரத்தில் திருமுறைப் பாராயணம் தொடங்கி விடுமாறு ஆணையிட்டுவிட்டு, சில நிமிடங்களுக்குள், சுவாமிகள் ஆங்கெழுந்தருளித் தம் பணியில் ஈடுபட்டு விட்டார்கள்.

மார்கழி மாதத்தில் காலை 6.00 மணிக்கு விரிவுரை தொடங்க வேண்டும். அவர்கள் 4 மணிக்கு நீராடி ஆன்மார்த்த பூசை முடித்துக்கொண்டு, பின்னர், மடாலயத்தில் எழுந்தருளும் முருகப் பெருமானுக்கும் பூசை செய்துவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் விரிவுரை தொடங்கி விடுவார்கள்.

திருவருணையில் ஈடுபாடு : சுவாமிகளுக்குத் திருவண்ணா மலையிற் பெரிதும் ஈடுபாடு உண்டு. தம் முதற் குருநாத தோற்றத்தினை அண்ணாமலையார் அருளிச் செய்தார்