பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

155

என்பதனாலோ, 'நினைத்த மாத்திரத்தில் முத்தியளிக்கும் தலம்' என்பதாலோ, தம் மடாலய முதற் குருநாதர் கார்த்திகை மாதக் கார்த்திகை நாள், சோதி, தோன்றும் வேளையில் தோன்றினார் என்பதாலோ, அனைத்தும் சேர்ந்தோ காரணமாகலாம். திருக்கார்த்திகைப் பெருவிழாக்களை அடிக்கடி தரிசனம் செய்யச் செல்வார்கள். அவர்களது சொல்லமுதம் பருக ஆண்டுறைந்தார் பெரிதும் விரும்புவார்கள். முற் குறிப்பிட்டவாறு, மாலையிலோ பிற்பகலிலோ தொடங்கும் சொற் பொழிவு முடிய இரவு 9.00 அல்லது 10.00 மணியாகிவிடும். பின்னரே நித்திய நியமங்களை முடித்துச் சிறிதளவு உணவு கொள்வார்கள். இரவு வீதிவலம் வருகையில் இறைவனை வழிபடுவார்கள், வாத்தியங்கள் தொடங்கி, வேத, தேவார, திருப்புகழ் பாராயண முதலிய சுவாமிகளின் முன்னிலையில், சற்று நீண்ட நேரமே தங்கிப் பணியாற்றும். சற்றேறக் குறைய 2 மணியும் ஆகிவிடும். பின்னரே உறக்கம். ஆயினும் வழக்கம் போல் 4 மணிக்கே விழித்துக் கொண்டு அன்றாடச் செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள். பகலில் பற்பலருக்குத் தரிசன மருளியும், அளவளாவியும் மகிழ்ச்சி யூட்டுவார்கள். குறிப்பிட்ட நேரம் கடவாமல் சொற்பொழிவுக் கூட்டத்திற் கெழுந்தருளி விடுவார்கள். இங்ஙனம் ஓய்வு சற்றுங் கொள்ளாமல் மன்பதை உய்தி வேண்டியே பணிகளை மேற்கொண்டார்கள்.

1932 ஆம் ஆண்டில் ஆரணி, ஆற்காடு, குடியேற்றம் முதலிய ஊர்களில் தொண்டு ஆற்றிவிட்டுக் கார்க்கூர் என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள். அவ்வூரினராய ஓரன்பர், தம் ஊருக்கெழுந்தருளிச் சமயச் சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டியதால் அங்கு எழுந்தருளினார்கள். சென்று சேர்ந்த காலம் முன்னிரவு. தங்கியிருக்க ஓர் வீடமைத்திருந்தனர். அவ்வீடு முழுவதற்கும் புதிதாக வெண்சுதை தீற்றப் பெற்றிருந்தது. பின்புறம் ஓர் குறடும், அதத்குக் கீழே மூன்றடி தாழ்ந்திருந்த ஓர் தாழ்வாரமும் இருந்தன. வெண்சுதை தீற்றப்பெற்றிருந்ததால் வேறுபாடறியாமல், குற்டு நெடுக இருப்பதாக எண்ணிச் சென்ற போது, வீழ்ந்துவிட்டனர். ஒரு காலின் எலும்பு முரிந்துவிட்டது. பாதத்திற்கும் முழங்காலுக்குமிடையே அம்முரிவு ஏற்பட்டுவிட்டது. குடியேற்றம் வைத்தியரும், திருத்தணிகை வைத்தியரும் வந்து பார்த்துக் கால் எலும்பு பொருந்துவது கடினமென்றும், வேலூர் டேனிஷ் மிஷன் வைத்தியசாலை மருத்துவர் முயன்றால் நலமாகக் கூடும்