பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வல்லிக்கண்ணன்

அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். "அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா?” என்று எண்ணி எண்ணி வியப்போம்.

'கல்கி' ஆசிரியர். ரா. கிருஷ்ணமூர்த்தி,
1939 நவம்பரில் ஆனந்த விகடனில் எழுதியது

“ஞானம் - மெய்ஞ்ஞானம் -துவராடை தாங்கிய மேனி-அங்க இலிங்கம் - தாழ்வடங்களின் தனியிடம் - திருநீற்றின் பொலிவு - தமிழ் மணங் கமழும் புன்முறுவல் - இதோ தோற்றுகின்றது....’

வித்துவான் - மு. . இரத்தின தேசிகர், குடவாயில்

'......காட்சியளவில் இவர்தம் வடிவும், அழகும் மனத்தைக் கவர்ந்தன. சிறிதே சிவந்து நிமிர்ந்த உருவம், துவராடை உடுத்த துகள்தீர்மேனி, பருமையும் மெலிவுமின்றிப் பாங்குற அமைந்த உடல் விரிந்த கொள்கையின் பரந்த நெற்றி. ஆழ்ந்த நோக்குடன் அன்பொழுகு கண்கள். நேர் நிமிர்ந்து முனைவளையாக் கூர் அறிவு காட்டும் கூரிய மூக்கு. தமிழ்ப் புலமை பூக்கும் தனி வாய். தெய்வ ஒளி வீசும் திருமுகம். இவர் முகத் தோற்றத்தை உற்று நோக்குக. இதில் தோற்றுவது யாது? சங்கத் தமிழின் தீங்களிப்போ? சிந்தை சேர்ந்த சிவத் தொளியோ அன்பு பழுத்த அகத் தெளிவோ! அறிவு பழுத்து அமைவளமோ தமிழின் பழுத்த தனியழகோ யாதெனப் புகல்வது? இவை யாவும் திரண்டெழுந்த “ஞானத்தின் திருவுருவோ நம் எதிரே தோன்றுவது? கண்டன யாவையும் வாரி வாரி உண்டன. கண்கள். கொண்டன களிப்பு.

......எழுத உரிய வடிவும் அழகும் இயற்கையிற் பெற்ற இவர் காதில் அசைந்தது குண்டலம். கழுத்தில் தவழ்ந்தது கண்டிகைத் தாவடம்.....’

சென்னை, டிப்டி கலைக்டர், ராவ் சாஹிப்,
கே. கோதண்டபாணி பிள்ளையவர்கள்.