உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வல்லிக்கண்ணன்


இது பிற்காலத்தில் நிகழ்ந்தது. அடிகள் சந்நியாசமுறைக்கு உரிய உறுதிமொழிகளை 1889ல் ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவருக்கு பதினாறு வயது தான் நிறைந்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் ஒருபொழுது கூடத் தமது மனஉறுதியிலிருந்து பிறழ்ந்துவிடவில்லை எனும் உண்மை வியந்து போற்றப்பட வேண்டியது ஆகும்.

அடிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது, மடாலயப் பொருள் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இருப்பினும் அடிகள் பொறுமையோடும், தகுந்த நிர்வாகத் திறமையோடும் நிலைமைகளை சீர்படுத்திவிட்டார்கள். மடாலயத் தலைமை ஏற்றுவிட்டபோதிலும், அடிகள் தம் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று பெரும் விருப்பம் கொண்டார்கள். அதற்காகத்தகுந்த ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தமிழ் நூல்களை ஒரு மாணவனின் அக்கறையோடும் ஆர்வத்தோடும் கற்றுத் தேர்ந்தார். அவ் ஆசிரியர் மரணமடைந்த பின்னர், அடிகள் தாமே பற்பல நூல்களையும் பயின்று சிறந்த அறிஞரானார்கள்.

அறிவுப் பணியே தெய்வப்பணி என்று ஞானியாரடிகள் கருதினார்கள். ‘அறிவே சிவமாவது ஆரும் அறிகிலார்; அறிவே சிவமாவது யாரும் அறிந்தபின், அறிவே சிவமாய் அறிந்திருப்பாரே’ என்று அடிகளார் வலியுறுத்தி வந்தார். அறிவைப் பெறுவதற்கு கல்வியே துணைபுரியும். எனவே மக்களிடையே கல்வி அறிவினை அதிகம் பரப்புதல் வேண்டும் என்பதை உயர்ந்த குறிக்கோளாக அவர்கள் கொண்டிருந்தார்கள். தமக்குக் கல்வி அறிவு வாய்த்தது போல, மற்றவர்களுக்கும் வாய்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப் பட்டார்கள். அவ்வாய்ப்பினை உண்டாக்கிக் கொடுப்பது கற்றவர் கடமை என்றும், கற்றவர்களுக்கு செல்வர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அடிகள் கருதினார்கள்.

தமிழின் தற்கால நிலை அடிகளாருக்கு வருத்தம் தந்தது. பிறநாட்டு மொழியும், பிற நாட்டு நாகரிகமும் நம்மிடையே பரவி வருவதனால், தமிழ் மொழி தளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலை மக்களின் தெய்வீக உணர்வு, தொண்டு மனப்பான்மை முதலியவற்றை தலையெடுக்காமல் செய்துவிடுகிறது. உண்மையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமெனில், ஆங்காங்கே சங்கங்கள் தோன்ற வேண்டும். ஜமீன்தார்களும்