பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

51


1925 ஆம் ஆண்டு ஈ.வெ. இராமசாமி பெரியார் அவர்களுடைய குடியரசு பத்திரிகை அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய ஞானியாரடிகள் பேசுவதைப் படித்து பாருங்கள்.

...???

"நமது நாட்டில் உயர்வு தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து இருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். குடிஅரசுவின் கருத்தும் அதுவே என நான் அறிந்துகொண்டேன். சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் அழிக்க வேண்டும். இவை குடிஅரசின் முதல் கொள்கையாக விளங்க வேண்டும். இப்பத்திரிகையில் ஸ்ரீ மான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு"

அதற்கு முன்னதாகப் பெரியார் பேசுவதைப் படியுங்கள்.

"இப்பத்திரிகை... சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமி என்னும் ஞானியார் சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அநேக பத்திரிகைகள் நமது நாட்டில் இருந்தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகையைப் போல் இல்லாமல், மனதில் பட்டதை தைரியமாய் பொதுஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்"

ஞானியாரடிகளின் உரையிலிருந்து நாம் அறிந்து கொள்வது நம் நாட்டில் இருக்கிற பழமையான மதமானது ஆணவம் மிகுந்து இருக்கிறது. அதில் சமத்துவம் இல்லை. அந்தச் சமயத்தில் கேடு உள்ளது. அதனை அழிக்க வேண்டும். இவைதான் குடிஅரசு ஏட்டின் முதல் கொள்கையாக இருக்க வேண்டும். இப்பத்திரிகையில் பெரியாருக்கு உள்ளதைப் போன்ற பொறுப்புத்தமக்கும் இருக்கிறது. பெரியாரது குடியரசு ஏடும் ஞானியாரடிகள் கூறுவதுபோல் சமய சீர்திருத்தத்தைக் குறிக்கோளாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டது. அதன் ஆழமும் வீச்சும் வேறு மாதிரியாக விளங்கிற்று. அதற்குக் காரணம் என்ன?

ஞானியாரடிகளின் வேண்டுகோளைத்தான் பெரியார் நிறைவேற்றக் கிளம்பினார். நிறைவேற்றவும் செய்தார். அறிவும் ஞானமும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களைப் போல மயக்கம் ஏற்படுத்தும். ஆனால் அவை ஒரே பொருளைக்