உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

83

வள்ளுவப் பெருந்தகையார். தாம் நல்லொழுக்க நெறி கடைப்பிடித்துப் பிறரையும் அந் நெறியினைக் கடைப்பிடிக்கு மாறு ஒழுகுபவர், யாவராலும் போற்றப்படுவது மட்டுமன்றிக் குருவாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க பெருஞ் சிறப்பும் பெறுவர். வீர சைவநெறி சீலம் கைக்கொள்ளும் தூயநெறி சீலத்தாலன்றி எவ்வகையாலும் மனம் ஒரு நெறிப்படாதென்பதை யறிந்த சான்றோர், வீரசைவ சமயத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். வீரசைவர் அறுபத்து நான்கு சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது விதி. தக்க கட்டுப்பாடுகளைக் கைக்கொள்பவர் வீரசைவர். குருவின் பாதோதகம் (திருவடிநீர்) போற்றி வைத்து நாடோறும், அவர் திருவடி தியானத்துடன் பருகவேண்டு மென்பதும், குருமொழி கடவாமல் வாழ வேண்டு மென்பதும் அவற்றுட் சில. (அப்பூதியடிகள் வரலாற்றிலே பாதோதகத்தின் சிறப்பினை நாம் பயில்கிறோம். துணிய நம் ஆணவம் மறுக்கிற தென்பதை உணர்கிறோம்.) பல பல ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் வாழும் வீரசைவர், பல பெரிய சிவாலயங்களிற் பூசனை புரிந்திருந்ததும் உண்டு. மிகச் சிலகோயில்களில் இன்றும் வீரசைவர் பூசனை நடை பெறுகிறது. வீரசைவர், ஆலய பூசனை, இட்டலிங்க பூசனை, புராண- இதிகாச விரிவுரைகள், சிறுவர்க்குக் கல்வி போதனை ஆகிய பல சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டு, தம்மைச் சூழ்ந்தாரையும் ஒழுக்க நெறியில் ஈடுபடுத்தி வந்ததுண்டு. பற்பல அரசியல் மாறுபாடுகள் நிகழ்ந்த காலங்களிலும் தம் நியதியின் வழுவாமல் மேற்கண்ட அறிவுப் பணிகளை நிகழ்த்தி வந்தன ரென்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள.

முதற் குருநாதர்

சோமநாத ஆராத்திரியர் : கர் நூல் மாவட்டத்திலே ஆத்மகூர் என்ற ஊர் இன்றும் உள்ளது. அங்கு வீர சைவர் பலர் வாழ்ந்தனர். அவர்கள், முற் கூறிய வீரசைவ நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அறுபத்து நான்கு சீலங்களையும் வழுவாது கடைப் பிடித்த பெரியாருள் ஒருவர், சோமநாத ஆராத்திரியர் ஆவர். அவர் வேத, ஆகம, புராண, இதிகாசங்களில் வல்லுநர். வீர சைவ - இட்டலிங்க பூசனை, பயன் முதலியவற்றைத் தம் கல்வி வன்மையால் ஆதாரங்கள் பலவற்றுடன் தொகுத்து எழுதி வைத்துள்ளார். அந்நூல்