பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழ் வளர்த்த நகரங்கள்


இராசகோபுரங்கள்

தில்லைக் கோவிலின் நான்கு பக்கங்களிலும் பெருமிதமாகக் காட்சி தரும் நான்கு இராசகோபுரங்கள் விளங்குகின்றன. இவை பல அரசர்களால் கட்டப் பெற்றவை. கோபுர வாயில்களில் உள்ள நிலைத் துரண்கள் மூன்றடிச் சதுரமும் முப்பதடி உயரமும் உள்ள ஒரே கல்லால் ஆயவை. அவைகளின் மேல் முதல்தளம் கருங்கற்களாலும் அதன் மேற்றளங்கள் எல்லாம் செங்கற்களாலும் சுதையாலும் அமைக்கப் பெற்றவையாகும். கோபுரத்தின் மாடங்களில் இறை வனின் பல திருக்கோலங்கள் கண்டவர் உள்ளத்தைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

கிழக்குக் கோபுரம்

இக் கோவிலின் கிழக்குக் கோபுரத்தை எழுநிலை மாடமாக எழுப்பியவன் இரண்டாம் குலோத்துங்க வைான். இவனே வடக்குக் கோபுரத்தையும் கட்டத் தொடங்கியுள்ளான். கிழக்குக் கோபுரத்தைக் குலோத் துங்கனுக்குப்பின்னர்க், காடவர்கோனகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருத்தியமைத்தான். பிற்காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் பச்சையப்ப முதலியாரும் அவர் தமக்கை யாரும் இக் கோபுரத்தை மேலும் அழகுபடுத்தினர்.

இக் கோபுரத்தின் மாடங்களில் பரத சாத்திரத்தில் பகரப்பெறும் நூற்றெட்டு காட்டிய பேதச் சிற்பங்களைக் காணலாம். அச் சிற்பங்களின் மேல் பரத சாத்திரத்தில் கூறியுள்ளவாறே அவற்றைப்பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன. இக் கோபுரமெங்கணும் அற்புதச் சிற்பங்கள் பல காணப்படுகின்றன.